சில செய்திகளுக்கு முன்னுரையோ பீடிகையோ தேவையில்லை. இயக்குநர் வசந்தபாலன் சுமார் 2 மணி நேரத்துக்கு முன்னர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவு இது. வாழ்க்கை என்பது எபோதுமே சூதாட்டம்தான்..

இதோ அவரது பதிவு,...2006ம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள்,பெரும்பாலும் இரவு வேளைகளிலிலே ஜீவியின் இசைக்கூடத்தில் நடக்கும்.ஜீவி தனி இசையமைப்பாளராக மாறுவதற்கு முன் ஏஆர்ரகுமான் அவர்களிடம் உதவி இசையமைப்பாளராக பணியில் இருந்தார்.அங்கிருந்த தொற்றிய தொட்டில் பழக்கம் என்று கூட சொல்லலாம்.இரவு பற்றிய ஆசை,கனவு,விருப்பம்,காதல் இவரிடமும் முழுமையாக இருந்தது.இரவில் கிடைக்கும் அமைதி இசைத்தேவதையை தாலாட்ட உகந்தது.சிறு புல்லாங்குழல் இசை கூட சிறு பிசிறின்றி நம் இதயத்தை நனைக்கும்.அப்போது இசையமைப்பாளர் ரகுநந்தன் ஜீவியுடன் வேலை செய்து வந்தார்.

நான் என் இணை இயக்குநருடன் ஜீவியின் இசைக்கூடத்தின் மொட்டைமாடியில் இரவு முழுக்க உலவிக்கொண்டிருப்பேன்.சில சமயங்களில் இரவுப்பூவின் மணத்தில் மயங்கி அங்குள்ள உணவுக்கூடத்தில் உறங்கிவிடுவேன். ரகுநந்தனை நாங்கள் அப்போது சூர்யா என்று அழைப்போம்.சூர்யா வந்து என்னை எழுப்பி ஒரு காட்சிக்கான பின்னணி இசை முடிந்தது என்பார்.சென்று பார்த்துவிட்டு என் சிற்றறிவுக்கு தோணிய விசயங்களை சொல்வேன் அல்லது சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டுவேன். அவர்கள் அடுத்த காட்சிக்கு செல்வார்கள்.இரவு 3 மணிக்கு ஜீவி என்னை அழைத்து “சார் பசிக்குது என்ன செய்ய?” என்று கேட்பார்.எனக்கும் பசிக்கும் நான் உடனே “இருங்க ஜீவி.வெளிய போய் எதாவது சாப்பிட கிடைக்குதா என்று பார்த்து விட்டு வருகிறேன்” என்று வெளியேறுவேன்.

தி நகர் முழுக்க இரவு அலைந்து திரிந்தால் கப் டீ கேனுடன் ஒருவர் நின்றிருப்பார்.போலீஸ் ஜீப்பில் காவலர் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார். என்னவென்று மிரட்டலுடன் பார்ப்பார் “டீ சாப்பிட சார்” என்று பவ்வயமாக பதிலுரைத்துவிட்டு இரவின் வீதிகளில் ஒரு கொசுவைப்போல சுற்றிக்கொண்டிருந்தேன்.

புதிய திரைப்படத்தின் போஸ்டர்களை அந்த அதிகாலை நேரத்தில் ஒட்டும் பணி நடக்கும்.திரைப்பட போஸ்டர்கள் மொத்தமாக தி நகருக்கு வரும் அங்கிருந்து பிரித்து பல்வேறு இடங்களுக்கு ஒட்ட அனுப்பப்படும்.போஸ்டர் ஒட்ட சங்கம் கூட உண்டு.அவர்களிடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்தேன்.“ஒருநாள் கூட போஸ்டர் தாங்கமாட்டேன் என்கிறதே,ஏன்?” என்றேன்.

“சென்னையில் முதல்ல சுவர் ரொம்ப கொறஞ்சிருச்சு சார்.அடுத்து நெறய கட்சி வந்துருச்சு சார்.நாம ஒட்டிட்டு போன உடனே அது மேலயே இல்லைன்னா அத கிழிச்சுப்போட்டுட்டு அதுக்கு மேலயே ஒட்டிட்டு போயிடுவானுங்க,நாம கேக்கவும் முடியாது.போஸ்டருக்கு ஆயுள் ஈசல் மாதிரி ஒருநாள் தான் சார்.சினிமாக்கு வௌம்பரம்ன்னா அது பிளக்ஸ் தான் சார்” 

2007ம் ஆண்டு வரை தமிழகத்தில் பிளக்ஸ் வைக்க அனுமதி இருந்தது.வெயில் திரைப்படத்தில் நிர்வாணமாக வெயிலில் கட்டப்பட்ட சிறுவனின் ஸ்டில்லை மவுண்ட் ரோட்டில் வைத்திருந்தோம்.அப்பறம் நிர்வாணமான சிறுவனின் ஸ்டில்லை வைக்கக்கூடாதுன்னு போலீஸின் உத்தரவின் பேரில் பசுபதியும் பரத்தும் இருக்கிற ஸ்டில் வைக்கப்பட்டது)
ரங்கநாதன் தெருவருகே குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த ஒரு தாத்தாவிடம் கேட்டேன்.
“இப்ப சாப்பிடறதுக்கு ஏதாவது கடையிருக்கா”
மேலும் கீழும் பார்த்தார்.
“நீ யாரு” ன்னு கேட்டார்.
“நான் ஒரு சினிமா டைரக்டர்.இப்போ வெயில்ன்னு ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்”
“நான் யாருன்னு தெரியுமா?”
“தெரியாது”
“நானும் சரவணாஸ்டோர்ஸ் அண்ணாச்சியும் ஒன்னா வியாபாரம் பண்ண இந்த தெருவுக்கு வந்தோம்.அவன் கெட்டிக்காரன் முன்னேறிட்டான்.நான் செலவாளி தோத்துட்டேன்.வியாபாரம்ங்கிறத ஒரு சூதாட்டம் தோத்தா கவலைப்படக்கூடாது.அடுத்த வேலைய பாக்கனும்.சினிமாவும் சூதாட்டம்தான் பாத்து இருந்துக்கோ” என்றார்
“கண்டிப்பா ஜெயிப்பேன்,நான் பெரிய சூதாடி” என்றேன்
உற்று பார்த்தார்.
“பெழச்சுப்ப போ” என்று கூறிவிட்டு குப்பைகளை எடுக்க நகர்ந்தார்.வாழ்வது பிழைப்பது இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா மெல்ல புரிந்தது.வாழ்வேன் என்று மனதில் உறுதியாக நினைத்து கொண்டு மெல்ல நகர்ந்தேன்.
மறுபடியும் அலைந்து சிஜடி காலனி அண்ணாசாலையில் திரும்புகிற முக்கில் ஒரு கடையை கண்டுபிடித்தேன்.கடைக்கு முன்பு ஏகப்பட்ட இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தன.கடையின் ஜட்டர் பாதியளவு திறந்து இருந்தது.சுடசுட பொங்கல்,வடை கிடைத்தது.பசிக்கு நான் பொங்கலை சாப்பிட்டு விட்டு ஜீவிக்கும் சூர்யாவுக்கும் ஒரு பார்