வஸந்த் என்கிற பெயரை வஸந்த் சாய் என்று மாற்றிக்கொண்டு சில ஆண்டுகளாக உலகப்பட விழாக்களில் மட்டுமே உலா வந்துகொண்டிருக்கும் ‘கேளடி கண்மணி’இயக்குநர், ரஜினியின் அண்ணாமலை’படத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்தது ஏன் என்று 26 வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்திருக்கிறார்.

கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் 1992ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘அண்ணாமலையை’ சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். முதலில் அப்படத்தின் இயக்குநராக அறிவிக்கப்பட்டிருந்தவர் பாலசந்தரின் சிஷ்யரான வஸந்த். படப்பிடிப்பு துவங்குவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு வஸந்த், அந்தப் படத்தை விட்டு காரணம் எதுவும் சொல்லாமல் வெளியேறினார் என்பது அப்போதைய பரபரப்புச் செய்தி.

வஸந்தின் அந்த வெளிநடப்பு குறித்து இயக்குநர் வசந்தபாலன் இன்று எழுதியுள்ள தனது முகநூல் பதிவில்,...ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் வசந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் சில பெண்களும் என்ற திரைப்படம் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. தொடர்ந்து உலகின் உயரிய திரைப்பட விழாக்களுக்கு உலா சென்று வருகிறது.வாழ்த்துகள் வசந்த் சார்.விருதுகள் குவியட்டும்.

நான் பள்ளி சிறுவனாக இருக்கும்போது 'கேளடி கண்மணி’ திரைப்படத்தை உறைந்து போய் பார்த்தேன்.அந்த வயதில் என்னை ஏதோ செய்தது.கதாநாயகப் படங்கள் பார்த்து பழகின மனதை உடைத்தது.ஆசை திரைப்படத்தின் பாடல்கள் என் பதின்பருவத்தில் வந்த திரைப்படம்.கொஞ்ச நாள் பொறு தலைவா பாடலை என்னையறியாமல் நான் உச்சரித்து கொண்டே இருப்பேன்.
ரிதம் படத்தின் கதையும் பாடல்களும் இன்னும் ஒலித்துகொண்டேயிருக்கும்.பாடல்களை இசையமைப்பாளர்களிடமிருந்து கேட்டு பெறுவதிலும் , அதை படமாக்குவதிலும் வசந்த் சார் ஒரு நிபுணன்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நான் திடீரென்று வசந்த் சாருக்கு போன் செய்து "ஏன் சார் சூப்பர்ஸ்டார் ரஜினி  நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் முடிவில் இருந்து பின்வாங்கினீர்கள்? " என்றேன்."அதுவும் படத்தின் செட் உட்பட அனைத்தும் முடிவாகி படப்பிடிப்பு துவங்கும் இருக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு ஏன் விலகினீர்கள்?" என்றேன். தொலைபேசியில் பத்து நிமிடம் அமைதி காத்தார். வெகுநேர தாமதத்திற்கு பிறகு "இன்னைக்கு இருக்கிற வசந்த் உனக்கு பிடிச்சிருக்குது தானே" என்று கேட்டார். "ஆமா" என்றேன். "அதுக்கு தான்" என்று தொலைபேசி இணைப்பை துண்டித்து கொண்டார்.

ஒரு மனிதன் தன்னை துண்டித்து கொள்வதற்கும் விலகி கொள்வதற்கும் ஏற்று கொள்வதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.பணத்தைத் தாண்டி மனம் இங்கே முக்கியமாகப்படுகிறது.காலம் எல்லா காயங்களையும் அழித்து விட்டு நமக்கு புதிய ஒரு விடையை காண்பிக்கும். இந்த விடை முன்பே தெரிந்து இருந்தால் அந்த விடையை தேர்வு செய்திருக்க மாட்டோமே என்று மனம் கிடந்து அலறும். என்ன செய்ய வாழ்க்கை எதிர்பாராமல் தானே நடக்கிறது. அதில் தானே சுகம், திருப்பம், அழுகை, கண்ணீர், மகிழ்ச்சி,கொண்டாட்டம் எல்லாமே......என்று பதிவிட்டிருக்கிறார்.