படம் இயக்குவதிலிருந்து நீண்ட ஓய்வெடுத்து வரும் இயக்குநர் பாரதிராஜா தொடர்ச்சியாக படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது சிம்பு படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிற தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்கிறார்.

தற்போது தனது முன்னாள் காதலி ஹன்ஷிகா மோத்வானியுடன்  ‘மஹா’படத்துக்காக கெஸ்ட் ரோலில் டூயட் பாடிக்கொண்டிருக்கும் நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான ’வந்தா ராஜாவா தான் வருவேன்’. அப்படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாகவுள்ள படம் ’மாநாடு. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. 

எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபு முதன்முறையாக அரசியல் த்ரில்லர் கலந்த கதையை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.இந்நிலையில் படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிம்புவுக்கு வில்லனாகக் களமிறங்குகிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. அச்செய்து குறித்து விசாரிக்கையில்தான் கங்கை அமரன் ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் பிசியாக இருக்கும் செய்தியே வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

’மாநாடு’ படத்தில் கங்கை அமரன் வில்லனாக நடிக்கும் செய்தியை அவரது மகன் வெங்கட் பிரபு மறுத்திருந்தாலும் உண்மையில் அந்தக் கேரக்டருக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர் அவர்தானாம். படத்தில் சில ஆக்‌ஷன் காட்சிகளும் சிம்புவிடம் அடிவாங்கும் காட்சிகளும் இருப்பதால் அவர் சற்று தயங்கியதாகத் தெரிகிறது. அடுத்தபடியாக வெங்கட் பிரபு பாரதி ராஜாவைத் தொடர்பு கொண்டு சிம்பு கூட மோதுற அளவுக்கு தெம்பா இருக்கீங்களா? என்று கேட்க, ‘ வாங்கடா தம்பிங்களா  ஒத்தைக்கு ஒத்தை மோதிப்பாக்கலாம்’ என்று சவால்விட்டபடி வில்லன் கேரக்டரில் நடிக்க ஒத்துக்கொண்டாராம் பாரதிராஜா.