80 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் என்ற படம் மீண்டும் 
வெளியிட இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் திருப்பதி ராஜன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.  

என்பதுகளில் நடிகை சில்க் ஸ்மிதா இடம் பெறும் பாடல்களே இல்லாத படங்கள் இல்லை என்று கூறலாம். என்பதுகளில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். 

நடிகர் வினுசக்கரவர்த்தியால், வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சில்க்ஸ் ஸ்மிதா. இயக்குநர் திருப்பதி ராஜன், நடிகை சில்க் ஸ்மிதாவை வைத்து 1995 ஆம் ஆண்டு ராக தாளங்கள் என்ற படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் வெளியாகாமல் நின்று போனது. அந்த படத்தை வெளியிட இயக்குநர் திருப்பதி ராஜன் முயன்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இயக்குநர் திருப்பதி ராஜன், பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து 
கொள்ளவில்லை என்பதுதான் அந்த செய்தி. இயக்குநர் திருப்பதி ராஜன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். 

அப்போது, நான் அரசு வேலையில் இருந்தேன். அப்போதுதான் வீணையும் நாதமும் என்ற படத்துக்காக ஹீரோயினை தேடிக் 
கொண்டிருந்தேன். இந்த படத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறி பெண் ஒருவரை பார்க்க அழைத்து சென்றார். அப்போது  விஜயலட்சுமி என்ற அந்த பெண்ணுக்கு மிதா என்ற பெயரை வைத்தேன். இதனைத் தொடர்ந்து என் படத்தில் ஒப்பந்தம் செய்தேன்.  அவரின் கையெழுத்துடன் கூடிய அக்ரிமென்டை பிரேம் போட்டு வைத்துள்ளேன். 

வீணையும் நாதமும் படத்துக்கான கிளைமாக்ஸ் காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, வினுசக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம்  படத்தில் நடித்தார். இதன் பிறகு சில்க் ஸ்மிதா புகழின் உச்சிக்கு சென்று விட்டார். பின், எனது படத்தில் நடித்து கொடுக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார். 

சில்க் ஸ்மிதா, இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு, என்னை பார்க்க விரும்புவதாக கூறினார்கள். அவரை பார்க்க விரும்பவில்லை என்றபோதும், என்னை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். சில்க் ஸ்மிதா படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது, என்னை ஏன் அழைத்தாய் என்று கேட்டேன். அதற்கு அவர் கண்கலங்கினார். இதன் பிறகு, அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது 4 அல்லது 5 குண்டர்கள் என்னை பார்க்க விடாமல் தடுத்தனர்.

தாடிக்காரர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் சில்க் ஸ்மிதா இருந்தார். சர்ப்போர்ட்டாகவும் இருந்தார். சுருக்கமாக சொல்ல வேண்டும்  என்றால் அந்த தாடிக்காரரின் பிடியில்தான் சில்க் ஸ்மிதா இருந்தார். அது மட்டுமல்லாமல் சில அரசியல்வாதிகளின் பிடியிலும் அவர்  இருந்தார்.

அவரை வைத்து பணம் எடுப்பதாக கூறி அவரிடம் இருந்த பணத்தை நாசம் செய்து, அவரது கடைசி காலத்தில் கையில்  காசுகூட இல்லாமல் நடுத்தெருவில் விட்டு விட்டனர். சில்க் ஸ்மிதா மீது நிறைய பேர் ஆசைப்பட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு என்னென்ன கெடுமைகளை எத்தனைபேர் செய்துள்ளனர் என்பது அனைவருக்கும்  தெரியும்.

சில்க் ஸ்மிதாவை பொறுத்தவரையில் அது தற்கொலை அல்ல... இவரது கடைசி காலம் ஏகப்பட்ட துன்பங்கள் நிறைந்தது. சில்க் ஸ்மிதா  பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அது பற்றி நான் புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன். "டர்ட்டி பிக்சர்" படத்தில் காட்டப்பட்ட  சில்க் ஸ்மிதாவுக்கும் நிஜத்தில் இருந்த சில்க் ஸ்மிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தான் சாகப்போவது பற்றி 10 நாட்களுக்கு  முன்பே அவருக்கு தெரியும். அவரை வைத்து நன்கு சம்பாதித்துவிட்டு, அவரை நடுத் தெருவில் விட்டனர். கோடி கோடியாக பணம்  சம்பாதித்த சில்க் ஸ்மிதா ஏன் சாக வேண்டும்? என்கிறார் இயக்குநர் திருப்பதி ராஜன். மேலும், நடிகை சில்க் ஸ்மிதா, கடைசியாக நடித்த  ராக தாளங்கள் என்ற படத்தை வெளியிட உள்ளேன் என்றும் திருப்பதி ராஜன் கூறினார்.