சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘விஸ்வாசம்’பட இயக்குநர் சிவா இயக்கும் ’தலைவர் 168’படத்தின் இசையமைப்பாளராக தனது உறவினர் அனிருத் பெயரை ரஜினி சிபாரிசு செய்ததைக் கண்டு கதி கலங்கிப்போயுள்ளாராம் அவர். ரஜினியின் சிபாரிசை தயாரிப்பு நிறுவனமும் வழிமொழிந்துள்ள நிலையில் இமான் அல்லது யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரில் ஒருவர்தான் வேண்டும் என்று மென்மையாக அடம்பிடிக்கத்துவங்கியிருக்கிறாராம் இயக்குநர் சிவா.

தலைவர் 168’என்று இப்போதைக்குப் பெயரிடப்பட்டுள்ள ரஜினியின் அடுத்த படத்துக்கான நட்சத்திர மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு நாயகியும் அவரது தங்கை பாத்திரத்துக்கு ஒரு முன்னணி நடிகையும் தேர்வு செய்யப்பட உள்ளநிலையில், அவருக்கு ஜோடியாக அநேகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை சிறுத்தை சிவாவின் முந்தைய பட ஒளிப்பதிவாளர், எடிட்டர்,ஸ்டண்ட் மாஸ்டர் ஆகியோருக்கு ஓ.கே.சொன்ன ரஜினி இசையமைப்பாளராக மட்டும் அனிருத் பெயரை சிபாரிசு செய்தாராம்.

ஆனால் அனிருத்தை இசையமைப்பாளராக்க சிவா விரும்பவில்லை. அஜீத்தை வைத்து சிவா இயக்கிய ’வேதாளம்’,’விவேகம்’ ஆகிய இரு படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அப்போதே அனிருத் மீது சிவாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாம்.தேவைப்படும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியாது. அவர் நினைத்தால்தான் தொடர்பு எல்லைக்குள் வருவார் என்பதால் அனிருத் மீது கடும் அதிருப்தியில் இருந்தாராம் இயக்குநர் சிவா.

அதனால்தான் விஸ்வாசம் படத்துக்கு இமானை இசையமைப்பாளராக்கினார் என்று சொல்கிறார்கள்.இந்நிலையில் இப்போது மீண்டும் அனிருத்தை வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை வந்ததையும் சிவா  மிக மென்மையாக நிராகரித்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ரஜினியின் மனம் புண்படக்கூடாது என்றும் நினைக்கும் சிவா, இமான் வேண்டாம் என்று நினைத்தால் தனக்கு யுவன் ஷங்கர் ராஜா கூட டபுள் ஓ.கே என்று இன்னொரு சாய்ஸும் கொடுத்திருக்கிறாராம். இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு தெரியவரும்.