தான் இயக்கும் ஆறாவது படத்துக்கு ஆறு கதைகள், ஆறு ஹீரோக்கள், ஆறு ஹீரோயின்கள், ஆறு எடிட்டர்கள், ஆறு இசையமைப்பாளர்கள் என்று படத்தை கூறுபோட்டு வைத்திருக்கிறார் சிம்புதேவன்.

’இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்பு தேவன் அடுத்ததாக ’அறை எண் 305ல் கடவுள்’,’இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’,’ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’,’புலி’ என்று தொடர்ச்சியாக 4 படங்கள் இயக்கினார். இதில் அவரது முதல் படம் தவிர்த்து மீதி எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

அடுத்து அவர் வடிவேலை வைத்துத் துவக்கிய ‘23ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் 24ம் புலிகேசி வடிவேலுவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தொடர்ந்து பஞ்சாயத்தில் இருக்கிறது. அது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்கள் எதிலும் சுமுகமான தீர்வுகள் ஏற்படவில்லை.

இந்நிலையில் 24ம் புலிகேசியை தனது படப்பட்டியல்களிலிருந்து தூக்கி எறிந்த சிம்பு தேவன் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் ‘கசட தபற’ என்ற படத்தைத் துவக்கி அதன் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டார். இந்த ஆறாவது பட செண்டிமெண்டுக்காகத்தான் ஆறு கதைகள் தொடங்கி ஆறு கதாநாயகிகள் ஆறு மனமே ஆறு பாடியிருக்கிறார் சிம்பு தேவன்.