Asianet News Tamil

இழுத்து ஷட்டர் போட்ட இயக்குநர் ஷங்கர், மிரண்டு வழிக்கு வந்த வைகைப்புயல் வடிவேலு: என்னா அடி, என்னா வலி!...

Director shankar vs vadivel
Director shankar vs vadivel
Author
First Published Mar 4, 2018, 10:02 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


தமிழ் திரையுலகில் எந்த பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக வந்து காமெடி சூப்பர் ஸ்டாராக ஜெயித்திருப்பவர் வடிவேலு. சமகாலத்தில் இப்படியொரு நகைச்சுவை கலைஞனை தமிழ் திரையுலகம் சந்திக்கவில்லை. உடல்மொழி, டயலாக் மாடுலேஷன், டைமிங் ரைமிங்...என எல்லா ஜானர்களிலும் பிய்ச்சு உதறும் பெரும் நகைச்சுவை ஆளுமைதான் வேலு! ரஜினியே தனது படத்தில் வேண்டி விரும்பி அவரை நடிக்க வைப்பதுடன், வடிவேலுவின் பெரிய ரசிகராகவும் இருந்தார். 

ஆனால் வடிவேலின் போதாதா காலம் 2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறேன் பேர்வழியென்று, தி.மு.க.வுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மரண அடி விழுந்தது. அரசியலில் அந்த மலை சாயந்த போது அடியில் சிக்கிய எலியாக மாட்டிக் கொண்டார் வடிவேலு. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கோலிவுட்டிலிருந்து வனவாசம் செல்ல நிர்பந்திக்கப்பட்டார். 

விஷால் உள்ளிட்டோர் புண்ணியத்தில் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ரீ-எண்ட்ரி வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்தாலும் கூட நகைச்சுவையில் மீண்டும் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். பொதுவாக விஜய் - வடிவேலு காம்பினேஷன் காமெடிகள் பட்டையை கிளப்பும். விஜய்யின் சமீபத்திய பிளாக் பஸ்டரான ‘மெர்சல்’ படத்தில் வடிவேலு இருந்தும் எந்த மேஜிக்கும் நடக்கவில்லை என்பது உண்மை. 

இந்த சூழலில்தான், வடிவேலுவை காமெடி ஹீரோவாக நிலை நிறுத்திய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் போல் தயாரான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பிராஜெக்டில் கமிட் ஆனார் வடிவேலு. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பு இந்தப் படம். ஷங்கரின் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதா! என பெரிய ஆர்டிஸ்டுகளே ஏங்கும் நிலையில், ஷங்கரே வடிவேலு மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தந்த அருமையான வாய்ப்பு இது. 

ஆனால் கைப்புள்ள வடிவேலுக்கு கட்டம் சரியில்லையோ என்னவோ, ஸ்பாட்டுக்கு வந்தோம் வெறித்தனமாய் காமெடியை கிளப்ப நடித்தோம் என்றில்லாமல் வேறு வகையில் வாலாட்டினார். கதை, டயலாக், மேக் அப் என எல்லாவற்றிலும் தலையிட்டு பெரும் டார்ச்சர்களை செய்தார் என்று அவர் மீது படக்குழு கடுமையாய் வருத்தப்பட்டு குற்றம் சாட்டியது. இயக்குநர் சிம்பு தேவனுடன் வடிவேலுவுக்கு மோதல் வலுத்தது. இறுதியில் ‘நான் இதில் நடிக்க மாட்டேன்’ என்று வடிவேலு அறிவிக்க,  படப்பிடிப்பு நின்று போனது. ஷங்கர் கடுப்பை அடக்கிக் கொண்டு இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்க எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் வேலைக்கு ஆகவில்லை. 

விளைவு, இந்த படத்தின் செட் மற்றும் வடிவேலுக்கான அட்வான்ஸ் தொகை என எல்லாம் சேர்த்து ஒன்பது கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும்,  வடிவேலு இப்போது பிரச்னை செய்து பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டார் என்று ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். விசாரித்த சங்கம், வடிவேலு நடிக்க வேண்டும் அல்லது படத்துக்கான செலவு தொகையை திருப்பி தரவேண்டும்! என்று தீர்ப்பளிக்க தயாரானது. 

இந்நிலையில் வடிவேலுவின் காமெடியால் அவரது ரசிகர்களாகவே ஆகியிருந்த சில முக்கிய தயாரிப்பாளர்கள் அவரை சந்தித்து ‘எவ்வளவு பெரிய கலைஞண்ணே நீங்க. மறுபிறவி எடுத்த மாதிரி மீண்டு வந்திருக்கீங்க. ஷங்கர் சார் கூட ஒரு ஷார்ட் ஃபிலிமாவது பண்ண முடியாதான்னு பாலிவுட் நடிகர்களே ஏங்குறப்ப, அவரு உங்களை நம்பி பணம் கட்டியிருக்காரு. விட்டுக் கொடுங்கண்ணே! உங்களுக்கு சிக்கல் வராம பார்த்துக்குறோம். இந்த பிரச்னையில நீங்க வீம்பு காட்டினா மறுபடியும் இண்டஸ்ட்ரீக்குள்ளே உங்களுக்கு வாய்ப்பே இல்லாம போயிடும். உங்களுக்காக இல்லாட்டியும் ரசிகர்களை நினைச்சுப் பாருங்கண்ணே!’ என்று இறங்கி வந்து பேசியிருக்கிறார்கள்.

அப்போதும் ‘உங்களுக்கு புரியுது என் அருமை. ஆனா அந்த சிம்புவுக்கு (இயக்குநர்) புரியலையே. சீனியர் ஆர்டிஸ்ட் சொல்றபடி மாற்றங்களை பண்ணிட்டு போக வேண்டிதானே! எது டிரெண்டுன்னு எனக்குத்தாம்யா தெரியும்.’ என்றாராம். டென்ஷனான தயாரிப்பாளர்கள் ‘இவரை தேடி வந்து கெஞ்சுன நம்மை செருப்பால அடிக்கணும். எக்கேடோ கெட்டு ஒழியட்டும்யா’ என்றபடி நகர்ந்துவிட்டார்கள். 

இதன் பிறகுதான் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு எதிராக ஷங்கர் புகாரை அடிப்படையாக வைத்து சில முக்கிய முடிவுகளை டிஸைன் செய்திருக்கிறது. அதன்படி பார்த்தால் வடிவேலுவுக்கு செமத்தியான அபராதம் கட்ட வேண்டிய சூழல் உருவானதாம். பத்து கோடியை தாண்டும் ஃபைனும், அடுத்து கமிட்டாகி இருக்கும் ப்ராஜெக்டுகளிலிருந்து கழட்டி விடப்படும் சூழலும் உருவாகியிருக்கிறது. 

கணக்குப் போட்டு பார்த்த வடிவேலுவுக்கு அப்போதுதான் தலை சுற்றியிருக்கிறது. ’சீண்டுவாரில்லாம போயிடுவ, ஜாக்கிரதையா இருந்துக்க.’ என்று வடிவேலுவை திரையில் வளர்த்துவிட்ட ஒரு சீனியர் நடிகர் மிக மிக உரிமையாக மிரட்டி அட்வைஸ் செய்திருக்கிறார். 

அதன் பிறகுதான் வடிவேலுவுக்கு சில உண்மை புரிந்திருக்கிறது. அந்த அபராதமும், ரெட்கார்டு நடவடிக்கைகளும் சேர்ந்து கொண்டால் அது தனக்கு செமத்தியான அடியாக இருக்கும், அதன் மூலம் ஏற்படும் வலி கடுமையாக இருக்கும்...என புரிந்தவர் தானாக வலிக்கு வந்திருக்கிறார். ’சரிப்பா! போனது போவட்டும். நடிச்சு தர்றேன்.’ என்றிருக்கிறாராம். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பு சிரித்தபடியே படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகிறது. 

நல்ல கலைஞர்கள் அழிந்துவிட கூடாது என்பதே ரசிகனின் எதிர்பார்ப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios