மற்ற பரபரப்புகளுக்கு மத்தியில், அதிலும் குறிப்பாக பிக்பாஸ் சீஸன் 3’ சூடு பிடித்தவுடன் மக்கள் ‘இந்தியன் 2’வை அப்படியே மறந்துவிட்டார்கள். ஆனால் இயக்குநர் ஷங்கரும் அப்படியே இருக்கமுடியுமா? எனெவே அவரும் ஒரு புதிய பிக்பாஸ் கேம் ஆடத்தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.

’இந்தியன் 2’வை பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இயக்குநர் ஷங்கர், கமல், தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் ஆகியோர் ஒருவருக்கொருவர் சுத்தமாக பேச்சு வார்த்தையில் இல்லை. ஏனெனில் படத்தின் நாயகனும் வில்லனும் ஆகிய கமல் இன்னும் மூன்று மாதங்களுக்கு நிச்சயமாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிட்டாராம்.இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.முதல்வன் 2 படத்தில் விஜய் நாயகனாக நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.இன்னொரு பக்கம், இயக்குநர் லிங்குசாமியின் முயற்சியில் ஷங்கருக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறதாம்.பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடுவதற்கேற்ப ஒரு படம் இயக்குங்கள் என்று ஷங்கரிடம் கேட்டிருக்கிறார்கள்.அப்படத்தைத் தயாரிக்க மும்பையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கிறதாம்.

இதனால், விஜய்யா? பிரபாஸா? என்கிற குழப்பத்தில் ஷங்கர் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இயக்குநர் ஷங்கர் தரப்பில் இதுபற்றிக் கேட்டால்,’ 2.0’ படத்தை சீன மொழியில் வெளியிடும் வேலைகளில் இயக்குநர் தீவிரமாக இருக்கிறார். அப்படம் சீனாவில் வெளியான பின்பே அடுத்த படம் பற்றி முடிவெடுப்பார் என்கிறார்கள். அந்த முடிவில் ‘இந்தியன் 2’ படத்திற்கு நிச்சயம் இடம் இல்லை என்றும் சமீபத்தில் அதிகக் கோபத்திலிருந்த ஒரு சமயத்தில் ஒரு பேப்பரில் ‘இந்தியன் 2’ என்று எழுதி அதைக் குப்பைத் தொட்டியில் போட்டதாகவும் சொல்கிறார்கள்.