கடந்த 19ம் தேதி இரவு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங், சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று கொண்டிருந்தது. இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 12 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினர். திரையுலகையே உலுக்கிய இந்த கோர விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், தயாரிப்பு நிறுவனமான லைகா, கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நடிகர் கமல் ஹாசன் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ள நிலையில், இனிமேல் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும், கதாநாயகர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை உரிய பாதுகாப்பு கொடுக்கவும் வலியுறுத்தி லைகா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

விபத்து குறித்து எதுவும் பேசாமல் இருந்த அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் தற்போது டுவிட்டரில் தனது இரங்கல்களை பதிவு செய்து உள்ளார். அதில், “பெரும் வலியோடு இதை எழுதுகிறேன், எனது உதவி இயக்குநர் மற்றும் குழுவினரின் இழப்பால் எனது தூக்கத்தை இழந்துவிட்டேன். நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, நூலிழையில் நான் தப்பித்தாலும், அந்த கிரேன் என் மீது விழுந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன், அந்த குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ”என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.