தம்பி தனுஷின் ‘அசுரன்’பெற்ற வெற்றியால் மிக உற்சாகமடைந்திருக்கும் இயக்குநர் செல்வராகவன் அவருக்கு அடுத்து எழுதி வரும் திரைகதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு குறிப்பு ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அது ‘புதுப்பேட்டை 2’வா என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

கடைசியாக நடிகர் சூர்யாவை ‘காப்பான்’ என்கிற தோல்விப்படத்தைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் அடுத்த படமின்றித் தவித்துவந்த நிலையில் அவருக்கு ஆறுதல் சொன்ன தம்பி தனுஷ் தயாரிப்பாளர்கள் எனக்காக கியூவில் நிற்கிறார்கள். நீங்க அடுத்த கதையை மட்டும் நம்பிக்கையோடு கண்டிப்பா ஜெயிக்கிற மாதிரி கொடுங்க என்று ஆறுதல் சொல்லியிருந்தார்.

தனுஷின் உற்சாக வாக்குறுதிய நம்பி தனி ஒரு நபராக தனது இல்லத்தில் அமர்ந்து கதை எழுதத் துவங்கிய செல்வராகவன் சில மாதங்களாக தனது ட்விட்டர், முகநூல் பக்கங்களில் நடமாடாமல் இருந்தார். இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்ட அவர்,...திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.இதை விட வேறு பெரிய சந்தோஷம் இல்லை. அமைதியோ அமைதி’என்று பதிவிட்டிருந்தார். அடுத்து ‘எந்த ஹோட்டல் சார் இது?’ என்று ஒரு ஃபாலோயர் கேட்டிருந்த கேள்விக்கு ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’என்று ரிப்ளை அனுப்பியிருந்தார்.

அவரது பதிவுக்குக் கீழே கமெண்டைத் தட்டி வரும் ரசிகர்கள், ...இனியாவது ஜாக்கிரதையா கதை எழுதுங்க....’ஆயிரத்தில் ஒருவன் 2’எடுங்க,...’புதுப்பேட்டை 2’எடுங்க...என்று ஆளுக்கொரு ஆலோசனைகளைக் கூறிவருகிறார்கள். இந்த கேள்விகளுக்கு ஏற்கனவே ஒரு முறை பதில் அளித்திருந்த செல்வராகவன்,...வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை  2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என்று பதில் அளித்திருந்தார். ஆனால் இப்போது தனுஷுக்காக அவர் எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை முற்றிலும் புதியது என்று தெரிகிறது.