’பன்னீர்ப் புஷ்பங்கள்’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகி ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’,’குணா’,’மகாநதி’ போன்ற முக்கியமான படங்களை இயக்கிய சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி, தன் தந்தை வழியில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘பழசிராஜா’, திலீப் – சித்தார்த் நடித்த ‘கம்மர சம்பவம்’, மோகன்லால் – நிவின் பாலி நடித்த ‘காயன்குளம் கொச்சுன்னி’, தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம்’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ‘கோகுலம்’ கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு இளைய இயக்குநர்களை அறிமுகம் செய்யும் இந்த நிறுவனம், காதல், ஆக்சன், என்று ஜனரஞ்சகமாக உருவாக்கப்படும் இந்த பெயரிடப்படாத படத்தையும் தயாரிக்க உள்ளனர்.

இயக்குநர் விஜய்யிடம் பல்வேறு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ள சஞ்சய் பாரதி இந்த படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும் , பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இயக்குநர் அவதாரம் எடுப்பதற்கு முன்னர் கரு.பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’, சுசீந்திரனின் ‘ஜீவா’,சூர்யா நடித்த ‘மாஸ்’ ஆகிய படங்களில் நடிகராக வந்து பார்த்தார் சஞ்சய் பாரதி. ’உன்கிட்ட வரவே மாட்டேன் என்று நடிப்பு அநியாயத்துக்கு அடம்பிடித்ததால் வேறுவழியின்றி  இயக்குநராகிவிட்டார்.