தமிழ்நாடு திரைப்பட சங்கத்திற்கு ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.  இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியின்றி ஏற்கனவே இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் விலகியதை அடுத்து தலைவர் பதவிக்கு எஸ்.பி.ஜெகநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த அமீரின் அணியும் போட்டியிலிருந்து திடீர்  என விலகியது. இதைதொடர்ந்து தேர்தல் அதிகாரியாக செயல்படும் வழக்கறிஞர் செந்தில்நாதன், ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிகாரியை மாற்ற வேண்டும் என ஜெகநாதன் தொழிலாளர் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிகிறது.  இதனால் தேர்தல் அதிகாரி செந்தில்நாதனை மாற்ற தொழிலாளர் நல ஆணையருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் ஜெகன்நாதன். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது உரிமையியல் சம்பந்தப்பட்டது, என்பதால் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்று கூறி இந்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.