அதிகம் அரசியல் கலக்காமல் நல்ல சினிமா நிகழ்வாகப் போய்க்கொண்டிருந்த கமல், இளையராஜா நிகழ்ச்சியில், ரஜினியும் கமலும் கண்டிப்பாக அர்சியலிம் முழுமையாக இறங்கவேண்டும். அதே சமயம் நாளை உங்கள் தம்பிமார்கள் [அதாவது நம்ம தம்பி விஜய்] அரசியலுக்கு வரும்போது நீங்கள் அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று செம சாமர்த்தியமாகப் பேசினார் இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் கலந்துகொண்ட கமல் பிறந்தநாள் விழா இசை நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கமலின் சினிமா சாதனைகளை வாழ்த்திக்கொண்டு வந்த நிலையில் தனது டர்ன் வந்தபோது அந்த மேடைக்கு முதன் முதலாக அரசியல் சாயம் பூச ஆரம்பித்தார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் அவரது பேச்சில் மகன் விஜய்க்கு சாதகமாக ஒரு உள்குத்தும் இருந்தது.

அவர் பேசுகையில்,’கமல் துணிச்சலாக அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ஏற்கனவே நான்  கூறியிருந்தேன். ஏமாற்றிவிடாதீர்கள். ரஜினியும் கமலும்  இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.  மொழிப் பிரச்சினை குறித்து யார் எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். தமிழ்நாட்டின் தண்ணீரைக் குடித்தாலே தமிழன்தான். ஆள்பவர்கள் புதிதாக வருபவர்களுக்கு வழிவிடவேண்டும். அராஜகம் இல்லாத ஊழல் இல்லாத ஆட்சியை தரவேண்டும்.  உங்கள் பின்னாடி நாங்கள் இருக்கிறோம். அதே போல் உங்கள் தம்பிமார்கள் வரும்போது நீங்கள் அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்றார். இப்பேச்சின் மூலம் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வந்தே தீருவார் என்பதை உறுதி செய்திருகிறார் எஸ்.ஏ.சி.