’97ல் ‘மின்சாரக் கனவு’, 2000ல் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்குப் பின்னர் சுமார் 18 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தனது மூன்றாவது படமான ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன்.

‘சர்வம் தாள மயம்’ தவில் இசைக்கருவியை உருவாக்கும் தலித் இளைஞன் ஒருவன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இசைக்கலைஞனாக விஸ்வரூபம் எடுக்கும் கதை. ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் 18 ஆண்டுகால இடைவெளியா? என்று கேட்டால் ‘அதனால என்ன இருந்துட்டுப்போகட்டுமே’ என்பது போல சிர்த்துவிட்டுப்பேச ஆரம்பிக்கிறார் ராஜீவ் மேனன்.

‘இவ்வளவு பெரிய இடைவெளி எப்படி விழுந்தது என்பதை நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கதை தயாராகும். அதற்குப் பொருத்தமான நடிகர்கள் கிடைக்கமாட்டார்கள். அடுத்து ஒரு நடிகர் கால்ஷீட் தரத் தயாராக இருப்பார். அப்போதைக்கு அவருக்கு பொருத்தமான கதை கைவசம் இருக்காது. இன்னொரு பக்கம் சின்ன பட்ஜெட் படமா, பெரிய படமா, இந்திப்படமா, தமிழா என்பது போன்ற காரணங்களாலும் மூன்றாவது படம் இவ்வளவு தள்ளிப்போய்விட்டது.

இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் என் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ராசியில்லாத, துரதிர்ஷ்டவசமான உதவி இயக்குநராக நடிகர் அஜீத் வருவாரே அந்த ராசிதான் நிஜ வாழ்க்கையில்  எனக்கு என்று நினைக்கிறேன்’ என்கிறார் ராஜிவ் மேனன்.