சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் கவிதை எழுதி வெளியிட்ட திரைப்பட இயக்குநரை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் மாட்டுச் சாணத்தை முகத்தில் வீசித் தாக்கினர். இச்சம்பவம் இன்று வெள்ளியன்று காலை கேரளா, திருச்சூர் மாவட்டத்திலுள்ள, இயக்குநரின் சொந்த ஊரான வல்லசிராவில் நடந்தது.

ப்ரியன் வல்லசிரா என்று அழைக்கப்படும் இயக்குநர் பிரிநந்தன் கேரள சினிமாவின் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். முன்னாள் கேரள முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரியின் தொண்டர் ஒருவர் குறித்து இவர் இயக்கிய ‘நெய்துக்காரன்’ கேரள சினிமாவின் மிக முக்கியமான படங்களுல் ஒன்று. இப்படத்துக்காக மலையாள  நடிகர் முரளி சிறந்த நடிகருக்காக தேசிய விருதும் பெற்றிருந்தார்.

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு பிரியநந்தன் தனது முகநூல் பக்கத்தில் சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு ஆதரவாக ஒரு கவிதை எழுதி வெளியிட்டிருந்தார். அதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தாலும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களிடமிருந்து ஆபாச கமெண்டுகளும் கொலை மிரட்டல்களும் வந்ததால் அப்பதிவை ஒரே நாளில் நீக்கிவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை தனது சொந்த ஊரான வல்லசிராவில் நடமாடிக்கொண்டிருந்த பிரியநந்தனை சுற்றி வளைத்த சில விஷமிகள் அவரது முகத்தில் மாட்டுச்சாணத்தைக் கரைத்து ஊற்றியதோடு, அவரைத் தாக்கவும் செய்தனர். அத்தாக்குதலிலிருந்து மீட்ட பொதுமக்கள் அவரை அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இச்சம்பவத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன்,’ கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ளமுடியாது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்’ என்கிறார்.