’விஜய் 65’படத்தை நான் இயக்கப்போவதாக செய்திகளில் துளியும் உண்மை இல்லை. விஜயைச் சந்திப்பதற்காக கதையோடு காத்திருக்கிறேன்’என இயக்குநர் பேரரசு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் விஜயை வைத்துப் படம் இயக்க கதையுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு பிரபல நாளிதழ் விஜயை வைத்துப் படம் இயக்கப்போகும் அடுத்த இரண்டு இயக்குநர்கள் என்ற தலைப்பில் ‘திருமலை’இயக்குநர் ரமணா சந்திரசேகர் பெயரையும், ‘சிவகாசி’,’திருப்பாச்சி’படங்களின் இயக்குநர் பேரரசு பெயரையும் வெளியிட்டது. அச்செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே மறுப்புத் தெரிவித்த ரமணா தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை எனவும், அச்செய்தி விஜயை தர்ம சங்கடப்படுத்தக்கூடும் என்பதால் அந்த மறுப்பை உடனே வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதே செய்தியை ரசித்த பேரரசு மவுனம் காத்தார். அடுத்து அவர் கலந்துகொண்ட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பேரரசுவைப் பேச அழைக்கும்போது ‘அடுத்த விஜய் பட இயக்குனரே’என்றெல்லாம் அடைமொழி கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில் பேரரசுவுக்கு அன்பாக தொலைபேசியில் பேசிய விஜயின் அப்பா என்ன சொன்னாரோ தெரியவில்லை. இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர். அதில்,...’விஜய் 65 படத்தை நான் இயக்கப் போவதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது. 

நான் விஜய்க்காகக் கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காகக் காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று ஜகா வாங்கியுள்ளார்.