சமீப காலமாக, மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியில் தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், பேட்மிண்டன் நட்சத்திர விளையாடு வீராங்கனையான சாய்னா நேவால் தன்னை பாஜக கட்சியில் இணைத்து கொண்டார். 

அதே போல் கடந்த ஆண்டு, தமிழ் சினிமாவில் பல வருடங்களாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவரும்,  நீண்டகால திராவிடக் கட்சிகளில் இருந்தவருமான ராதா ரவி, பாஜக கட்சியில் இணைந்தார்.

இவரை தொடர்ந்து தற்போது, விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, தல அஜித்தை வைத்து திருப்பதி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த, பிரபல இயக்குனர் பேரரசு தன்னை பாஜக கட்சியில் உறுப்பினராக இணைத்து கொண்டுள்ளார்.


நேற்று (சனிக்கிழமை) தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து, பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொண்டு உறுப்பினர் அட்டையைப் பெற்றார். மோடியின் தலைமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், மாநிலத்தில் தேசியக் கட்சியை வலுப்படுத்தப் பணியாற்றபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.