'அட்டகத்தி',  'மெட்ராஸ்' என்று சிறு பட்ஜெட் படங்களை இயக்கி மிக பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர், பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி',  'காலா'  என இரண்டு படங்களை இயக்கி,  மிகக் குறுகிய காலத்தில் ரஜினிகாந்தை  இயக்கிய இயக்குனர் என்ற பெயரை வாங்கினார்.

பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் 'பிர்சா முண்டா' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முதல் பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

திரைப்படம் இயக்குவதை தாண்டி, தயாரிப்பிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார் பா ரஞ்சித். அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.  இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய உதவியாளர் ஒருவரின் படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஷராதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்குகிறார். இந்த படத்தில், ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில், 'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்த, நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.