பொதுவாக ஒரு படம் வெற்றிபெற்றால் அதைத்தொடர்ந்து சில சர்ச்சைகள் கிளம்புவது உண்டு. ஆனால் வெளியான அனைத்து மொழிகளிலும் படுதோல்வி அடைந்த ‘ஒரு அடார் லவ்’ படம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கின்றன,

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார். ஆனால் இந்த படத்தில் முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள்.

இதுகுறித்து  நூரின் ஷெரீஃப் அளித்த பேட்டியில், “இயக்குநர் ஓமர் லுலு என்னைக் கதாநாயகியாக தேர்ந்தெடுத்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், ப்ரியா வாரியரின் கண் சிமிட்டல் வைரல் ஆனதால்,  மொத்தக் கதையையும் மாற்றி என் கதாபாத்திரத்தை ஓரம் கட்டினார்கள். சிறு வேடத்தில் நடிக்கவந்த பிரியாவின் கேரக்டரை ஊதிப்பெருக்கவைத்தார்கள்.

திரையில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு இதுதான். என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்ததால் மிகுந்த ஏமாற்றமடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார். நூரின் ஷெரீஃப்பின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது அந்தப்பேச்சுக்கு மிகத் தாமதமான பதிலளித்த இயக்குநர் ஓமர் ’இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார். நூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது. படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் ஓவராக ஆட ஆரம்பித்துவிட்டார். பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

பட ரிலீசுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார்.