மும்பையில் தத்தளித்த தமிழர்கள் 90 பேரை இயக்குநருடன் சேர்ந்து கரை சேர்த்த ஐ.ஏ.எஸ்... சினிமாவை மிஞ்சும் த்ரில்.!
கதை இங்கே முடியவில்லை என்பது, அடுத்த நாள் விடியும் போதுதான் தெரிந்தது. அதே கோவிந்தன் மீண்டும் பதட்டமான குரலில் பேசினார்.
தமிழில் பிரசாந்த் சினேகா நடித்த “விரும்புகிறேன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து பைவ்ஸ்டார், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டு பயலே 2 ஆகிய படங்களை இயக்கிய சுசி கணேசன் தற்போது இந்தியில் சில படங்களை ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இதற்காக அவர் மும்பையில் தங்கி இருக்கிறார். கொரோனா தொற்றுநோயால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மதுரை மற்றும் விருதுநகரை சேர்ந்த சுமார் 90 பேர் மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தகவல் அறிந்த இயக்குனர் சுசி கணேசன், தனக்கு தெரிந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி உதவியுடன் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்.
இதுபற்றி இயக்குனர் சுசி கணேசன் கூறும்போது, ‘’மும்பையில் இட்லி வியாபாரம் செய்யும் மதுரை , விருதுநகரை சேர்ந்த சுமார் 90 தமிழர்கள் , கொரோனா காரணமாக , தொழிலை இழந்து, ஊர் திரும்புவதற்கு தமிழ்நாடு இ-பாஸ் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாக நண்பர் கோவிந்தன் தொடர்பு கொண்டு கவலையோடு பேசினார். உதவுவதற்கு இங்கே ஒருவர் இருக்கிறார். உடனே விபரங்களை அனுப்புங்கள் என்றேன். அந்த ஒருவர் மகாராஷ்டிரா அரசில் பணி புரியும் அன்பழகன் ஐஏஎஸ். என் செய்தி கிடைக்கப்பெற்றதும் அடுத்த நொடி, அவரிடம் இருந்து வந்த செய்தி தயவு செய்து டோக்கன் நம்பரை அனுப்புங்கள்.
அரசின்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிற முக்கிய துறையில் செயல் அதிகாரி வேலைகளுக்கு நடுவே அவர் காட்டிய வேகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழக அரசு அதிகாரிகளோடு தொடர்புகொண்டு, அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் சம்பத்தப்பட்டவர்களிடமிருந்து அழைப்பு. “சார், 3 பஸ் வந்துவிட்டது. எல்லோரும் ஏறி அமர்ந்து விட்டார்கள். மிகவும் கலக்கத்தோடு இருக்கிறார்கள். சீக்கிரம் கிளம்பாவிட்டால், டிரைவர்கள் கிளம்பி விடுவார்கள்” மீண்டும் அன்பழகனுக்கு வாட்ஸ்அப் செய்தேன். பதில் இல்லை. கொஞ்சம் கவலை தொற்றிக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்துக்கொன்றிருந்த பத்தாவது நிமிடத்தில், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து போன் வந்தது. “சார் பாஸ் கிடைத்து விட்டது . எல்லோரும் கிளம்புகிறார்கள்” சந்தோஷமாக நன்றி சொன்னார்கள். வந்த நன்றிகளை சகோதரர் அன்பழகனுக்கு திருப்ப வாட்ஸப்பை திறந்தால் –3 பஸ் பாஸ்களை பார்வர்டு செய்திருந்தார். வாயாற நன்றி சொல்லிவிட்டு தூங்கப் போனேன்.
கதை இங்கே முடியவில்லை என்பது, அடுத்த நாள் விடியும் போதுதான் தெரிந்தது. அதே கோவிந்தன் மீண்டும் பதட்டமான குரலில் பேசினார். பாஸ் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், எல்லோரும் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போதே எதோ ஒரு வித பயம் காரணமாக டிரைவர்கள் 3 பஸ்ஸையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம. திரும்பவும் 3புதிய பஸ்களை ஏற்பாடு செய்கிறோம். இன்றே பாஸ் வாங்கி இவர்களை இன்றே அனுப்பாவிட்டால் மீண்டும் நேற்றைய நிலைமை ஏற்பட்டுவிடும். பழைய பாஸ் பயனில்லாமல் போய்விட்டது’’என்றார். பாஸ் என்பதை தாண்டி , பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்டவர்களின் பதைபதைப்பும், விடைதெரியாத மனக்குழப்பமும் கண்ணில் ஆடியது. மீண்டும் நடந்து விட்ட சோகத்தை அன்பழகனிடம் விவரித்தேன். அயரவில்லை அவர். மீண்டும் அனுப்புங்கள் என்றார். மீண்டும் 3 பஸ்களின் தகவல்களை அனுப்பினேன். அவர் உடனடியாக ஏற்பாடு செய்வதாக கூறினார். மீண்டும் நேற்றைய நடைமுறைகள். கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பதட்டம் இந்த பக்கம்.
இரண்டு மணி நேரத்தில் , ”பாஸ் கிடைத்துவிட்டது… மதுரைக்கும், விருதுநகருக்கும் மக்கள் கிளம்புகிறார்கள் ”என்றதும், இரண்டாவது முறை நன்றி சொல்வதற்காக மீண்டும் அழைத்தேன். பிஸி… பிறகுதான் தெரிந்தது, புனேயிலிருந்து ரயிலில் கிளம்பும் 1200 தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருந்தார் என்பது. பிறகு அவரிடம் பேசியபோது, “நீங்கள் கேட்டதும், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரி பூஜா கிர்லோஸுக்கு உங்கள் மெசேஜை பார்வேட் செய்தேன். அவர் உடனடியாக உதவினார். அவருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.
ஐ.ஏ.எஸ் என்பது கவர்ச்சியான பதவி அல்ல… களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாய் பதிய வைத்த சம்பவம் இது. அன்பழகனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி கொண்டிருக்கிறேன்”என அவர் தெரிவித்தார்.