படம் இயக்கி, நடிக்கும் பணிகளுக்கு மத்தியில் பி.ஜே.பி. அரசுக்கு எதிராக தீவிர அரசியல் பிரச்சாரத்தையும் கையில் எடுத்திருக்கும் இயக்குநர் ‘மூடர் கூடம்’ நவீன் ரகசியப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அதை தனது பகிரங்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த இரு படங்களிலும் பிசியாக இருக்கும் நிலையிலும் குறிப்பிட்ட எந்தக் கட்சிக்கும் ஆதரவு கோராமல் பி.ஜே.பி.க்கு எதிராக தனது முகநூல், வாட்ஸ் அப் பக்கங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவரும் நவீன், அச்செய்திகளுக்கு மத்தியில் தனது திடீர் திருமணச் செய்தியை இணைத்துள்ளார்.

அவரது திருமணப் பதிவில் ...எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம்' ...என்று பதிவிட்டுள்ளார்.