பிரபல இயக்குனர் மிஷ்கின் கடைசி விவசாயி படத்தை பார்த்து வியந்துபோயுள்ளார். இப்படத்தை பற்றி பாராட்டி பேசி அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

காக்கமுட்டை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி திரையுலகினரின் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன் (Manikandan). இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் வென்று அசத்தியது. அதன் பின்னர் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கினார் மணிகண்டன். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றன. 

இதையடுத்து இயக்குனர் மணிகண்டன், இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் கடைசி விவசாயி (Kadaisi vivasayi). இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி (Vijay sethupathi), யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைத்து வந்தார் பின்னர் சில காரணங்களால் அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இதனை இயக்குனர் மணிகண்டனே தயாரித்துள்ளார்.

நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதல் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் (Mysskin) கடைசி விவசாயி படத்தை பார்த்து வியந்துபோயுள்ளார். இப்படத்தை பற்றி பாராட்டி பேசி அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: “கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமென்று கடைசி விவசாயி படத்தை சொல்வேன். எனக்கு பல படங்கள் பிடிக்கும் ‘பராசக்தி’, ‘சேது’, ‘தங்கப்பதக்கம்’, ‘அன்பே வா’ ஆகியவை பிடிக்கும். மேலும் இயக்குனர்கள் ஸ்ரீதர், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், நண்பர்கள் வெற்றிமாறன், ராம் உள்ளிட்டவர்கள் இயக்கிய அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். நானும் ஒரு பத்து படங்களை எடுத்துள்ளேன். இவை அனைத்தையும் விட கடைசி விவசாயி மிகச் சிறந்த படம் என்று சொல்வேன். 

20 வருடங்களில் நாம் எவ்வளவு பொறுக்கி படங்களை பாத்திருப்போம், மோசமான படங்களையும் நாம் கொண்டாடி தீர்த்திருக்கிறோம். இந்த படத்தையும், இந்த படத்தை இயக்கிய எம்.மணிகண்டனை கொண்டாடவில்லை என்றால் நமக்குள் எந்த ஆன்மீக தன்மையும் இல்லை என்று அர்த்தம். இதை ஒரு முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தத்தை சேர்ந்தவர் என எல்லோராலையும் கொண்டாடப் படவேண்டும்.

இந்த படத்தை நாம் அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டும். இது வாழ்க்கையில் பார்க்க வேண்டிய முக்கியமான படம் என்று நாம் நம் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். இந்திய மக்களுக்காக, இந்நாட்டு மண்ணுக்காக எடுக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான படம் இது.

இப்படத்தில் நடித்த முதியவரை பார்க்கும்போது எனக்கு ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் தான் நினைவுக்கு வந்தார். இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் 20 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கும். இப்படத்தை அனைத்து உதவி இயக்குனர்களும், அனைத்து இயக்குனர்களும் பார்க்க வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரது கால்களையும் நான் முத்தமிடுகிறேன்” என மிஷ்கின் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... Oscars 2022 Host : ஆஸ்கர் விருது விழாவில் அதிரடி மாற்றம்! 4 வருஷமா மிஸ் பண்ணது... இப்போ மீண்டும் வந்தாச்சு

Scroll to load tweet…