நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின் திடீரென விலகினர். அந்த படத்திற்காக பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ததால் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் தான் மிஷ்கின் படத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் துப்பறிவாளன் 2 பட விவகாரம் குறித்து நேற்று விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கதை எழுத மட்டும் 35 லட்சம் வரை செலவிட்டதாகவும், படம் எடுக்க 13 கோடி வரை செலவழித்து விட்டு பாதியில் விலகியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மற்ற தயாரிப்பாளர்கள் அனைவரும் இயக்குநர் மிஷ்கினிடம் ஜாக்கிரதையாக இருங்கள்... என்னைப் போல் ஏமாந்துவிடாதீர்கள் என்று சகட்டு மேனிக்கு சாடியிருந்தார். 

இந்நிலையில் கண்ணாமூச்சி என்ற இணைய தொடரின் விழா ஒன்றில் பேசிய மிஷ்கின் நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுத்துள்ளார். கதையை எழுத நான் கேட்டது 7.50 லட்சம், அதிலும் வெறும்  7 லட்சம் மட்டுமே செலவு செய்தேன். இப்போது திரைக்கதை எழுத ரூ. 35 லட்சம் செலவு செய்ததாக சொல்றான். இதை விஷால் ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும். கதை எழுதுவதற்கு ஒருவன் ரூ. 35 லட்சம் செலவழிக்கிறான் என்றால் அவன் இயக்குநராவதற்கே தகுதியற்றவன் என சகட்டு  மேனிக்கு பொங்கினார். 

நான் தம்பி என்று நினைத்த ஒருவன், என் தாயை மிகவும் கேவலமான வார்த்தையால் பேசினால், அதன் பிறகு என்னால் எப்படி அந்த படத்தில் வேலை செய்ய முடியும். விஷால் என் அம்மாவை ஆசிங்கமாக பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 10 நாட்கள் என் ஆபிசுக்கு வந்து அலைந்து என்.ஓ.சி. வாங்கி கொண்டு போனான். அதன் பிறகு தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரையே வெளியிட முடிந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கோ, இயக்குநர்கள் சங்கத்துக்கோ சென்றிருந்தால் விஷாலால் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

உன்னை யாரென்று மக்கள் புரிந்துகொள்வார்கள். உன்னை கண்டுபிடிக்க முடியாதா?, உன் தந்தை சொல்லுவார் நான் எப்படி பழகினேன் என்று, உன் அம்மா, தங்கச்சி சொல்லுவாங்க நான் உன்கிட்ட எப்படி பழகினேன்னு என்று சொல்லுவாங்க. என் அம்மாவை கெட்ட வார்த்தையில் திட்டியவனோடு எப்படி படம் பண்ண முடியும் என்று தான் விலகி வந்தேன் என்று ஆவேசமாக பேசினார்.