‘இந்த மீடியாகாரனுங்க என்னா வெரட்டு வெரட்டுறானுங்க. ஒரு கோயிலுக்குக் கூட நிம்மதியாப் போகமுடியலை’ என்று தனது உதவி இயக்குநர்கள் மற்றும் ‘சர்கார்’ டீமிடம் புலம்பிவிட்டு, தன்னிடமிருந்த அத்தனை போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாராம் முருகதாஸ். படம் ஹிட்டோ, அட்டோ அவர் இன்னும் சில தினங்களுக்கு தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருப்பார் என்கிறார்கள் ‘தீபாவளி அன்பளிப்புகள்’ எதையும் அவரிடமிருந்து பெறமுடியாமல் அப்செட்டில் இருக்கும் அவரது உதவியாளர்கள்.

‘சர்கார்’ திருட்டு சமாச்சாரம் முருகதாஸிடமிருந்து நகர்ந்து பாக்கியராஜின் மைதானத்துக்கு சென்றுவிட்டாலும் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளின் மையப்புள்ளியாக முருகதாஸே இருக்கிறார். பாக்கியராஜின் ராஜினாமா கூட முருகதாஸ் தூண்டுதலில் ஆர்.கே. செல்வமணி கொடுத்த நெருக்கடிதான் என்பது போன்ற எதாவது சில செய்திகள் முருகதாஸை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இவற்றை முடிவுக்கு கொண்டுவர இருக்கும் ஒரே வழி இந்த உலகத்துடனான தொடர்பை ஒரேயடியாக துண்டித்துக்கொள்வதுதான் என்று முடிவெடுத்தே தனது அத்தனை செல்போன்களையும் தலையைச் சுத்தி தூக்கிப்போட்டுவிட்டாராம் முருகதாஸ். இதனால் ‘சர்கார்’ பட பத்திரிகையாளர் காட்சி இருக்குமா? அப்படியே இருந்தாலும் அதற்கு முருகதாஸ் ஆஜராவாரா??  என்ற கேள்விகளோடு அவரைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள் மீடியா புண்ணியவான்கள்.