அட்லி இயக்கும் படத்துக்கு அடுத்த படமான ‘தளபதி 64’படம் தன் கையை விட்டுப்போனதற்கான காரணத்தை வெளியிட்டு, அதற்காக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார் ஜெயம் ரவியின் அண்ணனும் பிரபல இயக்குநருமான மோகன்ராஜா.

துவக்கத்தில் ரீ மேபடங்களிலேயே குளிர் காய்ந்து வந்த இயக்குநர் ராஜாவுக்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படம்  மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் திரைப்படமும் ரசிகர்களிடம் ஓரளவுக்கு  வரவேற்பைப் பெற்றது. தற்போது மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தாண்டின் இறுதியில் தொடங்கவுள்ளது.

ஆனால் முன்னர், நடிகர் விஜய்யை வைத்து மற்றொரு படத்தை இயக்கவுள்ளதாகவும் மோகன் ராஜா சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அப்படம் தான் தளபதி 64’ என்று விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் விஜய் தயாரிப்பாளர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பால் இளைய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குநர் என்று அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், விஜய்யுடன் இணைய வேண்டிய படம் தாமதமானதற்கான காரணம் குறித்து மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார். இதுபற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவருக்கு தனி ஒருவனும், வேலைக்காரனும் மிகவும் பிடித்திருந்தது.

என்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான நபர். அவரது நட்பு எனக்கு மிகவும் முக்கியம். ஆனால், தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தைத் தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். இதனால்தான் தளபதி64 படம் என் கையைவிட்டுப்போனது. என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்துள்ளனர். ஆனால், அவர்களின் பொறுமைக்கு ஏற்ப நிச்சயம் நல்ல படமாகக் கொடுப்பேன்”என்று அப்பேட்டியில் சொல்லியுள்ளார்.