ஸ்டாலின் மகனை ஏமாற்றினாரா மிஷ்கின்: கோடம்பாக்கத்தை கலக்கும் கோடி ரூபாய் விவகாரம். 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’ படம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கோயமுத்தூர் பகுதியில் பெருமளவு ஷூட் முடிந்து, கனடாவில் ரெஸ்டுக்கு போயிருந்தார் மிஷ்கின். 

இந்நிலையில், மிஷ்கின் மீது ‘கோடி ரூபாய் புகார்’ சொல்லி கோர்ட்டுக்கு போயிருக்கிறார் மைத்ரேயா! என்பவர். காரணம், தன்னிடம் ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு, அதை செலவு செய்து  சைக்கோ கதையை உருவாக்கிய மிஷ்கின், பின் தன்னை விட்டுவிட்டு உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை துவக்கி படமெடுத்துக் கொண்டிருக்கிறார்.  என் பணத்தையும், எதிர்பார்ப்பையும் ஏமாற்றிய மிஷ்கினின் சைக்கோ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்! என்று கூறியுள்ளாராம். மைத்ரேயா, பாரம்பரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவன குடும்பத்தில் பொண்ணு எடுத்தவரென்பதால்  வழக்கு வீரியமாக இருக்கும் என்கிறார்கள். 

இந்நிலையில், இந்த திடீர் வழக்கு பஞ்சாயத்தை பார்த்து டென்ஷன் ஆகிவிட்டாராம் உதயநிதி. ‘உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது.’ என்று சொல்லித்தான் உதயநிதியை மிஷ்கின் சைக்கோ படத்தினுள் கொண்டு வந்து தயாரிக்க வைத்தாராம். இப்போது இப்படியொரு பஞ்சாயத்து கிளம்பியுள்ளதாலேயே உதயநிதி ஏக அப்செட்.  தங்கள் தரப்பையும் மிஷ்கின் ஏமாற்றிவிட்டதாக உதயநிதி நினைப்பதாகவும் ஒரு சிக்கலை கிளப்பிவிட்டுள்ளது ஒரு கும்பல். 

ஒட்டு மொத்த விவகாரத்தையும் பார்த்து ஷார்ப் இயக்குநர் மிஷ்கின் ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டாராம். ’நானென்ன அந்த மாதிரி சீட்டிங் பேர்வழியா?’ என்று கொதித்திருக்கிறாராம் மறுபுறம். ஆக மொத்தத்தில் சைக்கோ படமே ஒரு விதமான பிரச்னை சைக்கோவில் சிக்கிக் கிடக்கிறது என்று முணுமுணுக்கிறது  கோடம்பாக்கம் வட்டாரம்.