செல்வராஜ் என்று என் அப்பாவின் பெயர் சொல்லியே என்னை அழைத்து அத்தனை பேருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கும் பிரபஞ்சன் சாரின் ப்ரியத்தின் மீதான பிரமிப்பு என்பது என்னால் இன்று வரை நம்பமுடியாதது. யாரென்று தெரியாதவனை அவர் தான் அழைத்து பேசினார். 

“எழுத்துலகில் விருதுகள் வாங்குவதற்கு தகுதியானவை உங்கள் பிஞ்சு கைகள் செல்வராஜ்” என்று சொல்லி உறைய வைத்தததோடு மட்டுமில்லாமல் தாமிரபரணியில் கொல்லபடாதவர்களுக்காக முதல் விருதாக ஜெயந்தன் விருது அறிவித்து சிலிர்ப்பூட்டியதும் அவர் தான். 
அவருக்கு ஏன் என்னை அவ்வளவு பிடித்தது என்ற கேள்வியை “ மறக்கவே நினைக்கிறேன் “ எழுதும்போது வெட்கபடாமல் கேட்டிருக்கிறேன்.

அவர் இப்படி சொன்னார் 
“ உங்கள் மீது வேரின் வீச்சம் இருக்கிறது செல்வராஜ் இந்த கிழவனுக்கு இதை விட வேறு என்ன காரணம் வேண்டும் உங்களை பிடிப்பதற்கு” 
இளைய தலைமுறையோடு இப்படி வேர் நுனி வரை வந்து பேசுகிற அவருக்கு அந்த பெயர் பிரபஞ்சன் என்பது சரியானது தான் .
மறக்கவே நினைக்கிறேன் க்கு முன்னுரை எழுதும் போது சொன்னார் “ உங்கள் மனிதர்களை நானும் பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன் செல்வராஜ் அவர்களை என் எழுத்துள்ளும் சுதந்திரமாய் திரிய விட நான் விரும்புகிறேன் “ இது தான் அவரின் தனித்த பிரபஞ்சம். 

அதனால் தான் அவருடைய வானம் யாவருக்கும் வசப்பட கூடியதாகவே எப்போதும் இருந்தது. வசப்பட்ட வர்களுக்கு தெரியும் அவருடைய வானம் எத்தனை மிடுக்கானது என்று. அவர்களுக்கு தான் தெரியும் அவருடைய கூலிங் கிளாஸ் எத்தனை வண்ணம் காட்ட கூடியதென்றும், அவர்களுக்கு தான் தெரியும் அவரின் நறுக்கிய மீசையை தொட்டு தடவி வரும் வார்த்தைகளின் வசீகரமும் கூட....

பரியேறும் பெருமாளின் கதை அவருக்கு தெரியும் சொல்லியிருக்கிறேன். என் பெரும் பசிக்கான தீனி இந்த கதையில் இருக்கிறது சீக்கிரம் காட்சிப்படுத்தி வாருங்கள் செல்வராஜ் என்று அனுப்பி வைத்தார் . படம் வெளியான போது அவர் மருத்துவமனை யில் இருந்தார். ஆனால் அந்த பிரபஞ்சம் அங்கிருந்தும் மறக்காமல் எனக்கு அழைத்து பேசியது தான் அவர் பிரியத்தின் பெரும் உச்சம்.

“வாழ்த்துக்கள் செல்வராஜ் உங்கள் படத்தை எல்லோரும் பாராட்டுகிறார்கள் நல்லது சந்தோசம்”
“நன்றி சார் ஆனாலும் நீங்க பார்க்கனும் சார். சீக்கிரம் சரியாகி வாங்க சார். பெரும் பசி ன்னு சொன்னீங்கள்ள”
“ ஹா ஹா பசி ன்னா என்னோட பசி இல்ல செல்வராஜ் இந்த சமூகத்தோட பசி அதுக்கு உங்க படம் நல்ல வேட்டைன்னு சொன்னாங்க செல்வராஜ் அது போதும் ல நிம்மதி தான் “
“நன்றி சார் வந்து பார்க்கிறேன் சார்”
“நானே வருவேன் செல்வராஜ் என் சென்னையை பார்க்க சரியா”

என்னிடம் மட்டுமல்ல நிறைய பேரிடம் இப்படி சொல்லியிருக்கிறார். அதனால் தான் வருவாரென்று நம்பியிருந்தோம். போறேன் என்று அவர் யாரிடமும் சொல்லவேயில்லை ஆனால் நிமிர்ந்து பார் என் வானம் என்று அவர் போய்விட்டார் .
நிமிர்ந்து பார்த்தபடியே இருக்கிறேன் சார் இன்று என் வானம் உங்கள் நறுக்கிய மீசை போலவே இருக்கிறது சார்
Miss u sir ❤️❤️❤️❤️❤️