’தமிழ் சினிமாவின் தலையில் இடி விழுந்தது’...இயக்குநர்களின் இயக்குநர் மகேந்திரன் சில குறிப்புகள்...
இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.
இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.
1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்."நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்று பெசினார்.
இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.
சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்."இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.
அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்றுருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்."நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.
மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை எழுதச் சோன்னர் எம்.ஜி.ஆர்.பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.
"அனாதைகள்'' என்ற நாடகத்தை எழுதித் தந்தார் மகேந்திரன். அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து கதாநாயகியாக சவித்திரியையும் ஒப்பந்தம் செய்தார். பைனான்சியர் இறந்ததால் படம் பாதியில் நின்றுவிட்டது.இந்த நிலையில் தான் நடித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.
1966-ம்ஆண்டு "நாம் மூவர்'' படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.
"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், "துக்ளக்'' பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்தார். அங்கு "சோ''வை பார்க்க வந்த நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டனர்.
மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித்தரும்படி செந்தாமரை கேட்டுக்கொண்டார்.
"இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் ஐந்து நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.
நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார். "இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. 100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.
"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.
எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.
அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.
ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.
இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கினார் மகேந்திரன்.
படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைக்க பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார்."முள்ளும் மலரும்'' மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார்.
புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை'' என்கிற குறுநாவலை "உதிரிப்பூக்கள்.'' படமாக இயக்கினார். சிறந்த கலைப்படைப்பாக பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.
"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''. அதன் பிறகு மோகன் -சுகாசினி அறிமுகமான "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' பட்த்கை இயக்கினார். 12-12-1980-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.
"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.
தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 1980ல் வெளியான "ஜானி.'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை பட்த்தை எடுத்தார்.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின், இயக்கத்தில் உருவானது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர் நடித்திருந்தனர்.
நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும் என்று சொல்லும் இயக்குனர் மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின். இவர்களது மகன் ஜான். இவர் விஜய் நடித்த "சச்சின்'' படத்தை இயக்கியவர். டிம்பிள், அனுரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
பள்ளி, கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தய்ங்களில் கலந்து கொண்டார். சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார் மகேந்திரன்.
"மெட்டி'', "நண்டு'', "எனக்கு நானே எழுதிக்கொண்டது'' முதலான புத்தகங்களை மகேந்திரன் எழுதி உள்ளார். "உதிரிப்பூக்கள்'' திரைக்கதை-வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.
2016 - ஆம் ஆண்டு விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன் தொடர்ந்து, நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் ஆகிய தமிழ்ப் படங்களிலும் கட்டமராயுடு என்கிற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.
கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை, மிக எளிமை விரும்பி!கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான வேடத்துக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ செளத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்களில்’ அஸ்வினி பெயர் லட்சுமிதான்
நடிகர் செந்தாமரையின் பெயர் தான் லட்சுமி!தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர், சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின் ‘ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!
அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’, 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே
-தகவல் உதவி ஜி. பாலன்