Asianet News TamilAsianet News Tamil

‘டே நண்பா..!’ கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலனுக்கு மருத்துவமனையில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி...!

 வசந்தபாலனின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான லிங்குசாமி அவரை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்து வசந்தபாலன் மிகவும் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு இதோ... 

Director lingusamy meets his friend vasanthabalan who taking corona treatment at hospital
Author
Chennai, First Published May 15, 2021, 4:20 PM IST

கொரோனா 2வது அலையால் திரையுலகினர் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இயக்குநர் கே.வி.ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு ஆகியோரது கொரோனா மரணங்களைக் கண்டு திரையுலகம் மொத்தமும் அதிர்ச்சியில் உறைந்திருந்த சமயத்தில், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்தவருமான வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

Director lingusamy meets his friend vasanthabalan who taking corona treatment at hospital

தீவிர சிகிச்சைப் பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தற்போது வசந்தபாலன் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆக்ஸிஜன் சிலிண்டரின் தேவை இல்லாமல் நல்ல முறையில் சுவாசித்து வருகிறார். இந்நிலையில் வசந்தபாலனின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான லிங்குசாமி அவரை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்து வசந்தபாலன் மிகவும் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு இதோ... 

வீரம் என்றால் என்ன..?

பயமில்லாத மாதிரி நடிக்கிறது.

பழைய வசனம்.

வீரம் என்றால் என்ன தெரியுமா..?

பேரன்பின் மிகுதியில்

நெருக்கடியான நேரத்தில்

அன்பானவர்கள் பக்கம் நிற்பது.

புதிய வசனம்.

போன வாரத்தில்

மருத்துவமனையின்

தீவிர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று

இரவு முழுக்க நித்திரையின்றி

இரவு மிருகமாய்

உழண்டவண்ணம் இருக்கிறது.

விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்

மருத்துவமனைத் தேடி விரைகிறது.

எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது.

“தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது” என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது.

இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது.

“உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது”.

“பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள்” என்று இறைஞ்சுகிறது.

வேறு வழியின்றி முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

மெல்ல என் படுக்கையை ஒட்டி ஒரு உருவம் நின்றபடியே எனைப் பார்த்த வண்ணம் இருக்கிறது.

ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.

எனையே உற்றுப் பார்த்த வண்ணம் இருக்கிறது.

மருத்துவரா?

இல்லை

செவிலியரா?

என்று

எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.

உள்ளிருந்து “டாக்டர்” என உச்சரிக்கிறேன்.

“லிங்குசாமிடா” என்றது அந்த குரல்.

அத்தனை சுவாசக் கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி “டே! நண்பா” என்று கத்தினேன்.

“பாலா” என்றான்.

அவன் குரல் உடைந்திருந்தது.

“வந்திருவடா…”

“ம்” என்றேன்.

என் உடலைத் தடவிக் கொடுத்தான்.

எனக்காக பிரார்த்தனை செய்தான்.

என் உடையாத கண்ணீர் பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த் துளி கசிந்தது.

“தைரியமாக இரு” என்று என்னிடம் சொல்லிவிட்டு செல்லும்போது யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.

இந்த உயர்ந்த நட்புக்கு நான் என்ன செய்தேன் என்று மனம் முப்பது ஆண்டுகள் முன்னே, பின்னே ஓடியது.

“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா…..” என்றேன்.

நானிருக்கிறேன். நாங்களிருக்கிறோம். என்றபடி  ஒரு சாமி  என் அறையை விட்டு வெளியேறியது.

கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது.

ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..

ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..

Follow Us:
Download App:
  • android
  • ios