’இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு? அப்படிக் கற்றுக்கொள்வதால் நம் தாய் மொழியின் மீது உள்ள பற்றுதல் குறைந்தாவிடப் போகிறது?? என்று எஸ்.வி.சேகர்,காயத்ரி ரகுராம்களுக்கு அடுத்தபடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாகக் கூவியிருக்கிறார் இயக்குநரும் நடிகையுமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

 கடந்த 14ஆம் தேதி இந்தி தினத்தை  முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரே நாடு, ஒரே மொழி என்ற தலைப்பில்  கருத்து வெளியிட்டிருந்தார். அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும்  முக்கியத்துவம் உள்ளது.  ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதே இந்தியாவுக்கான அடையாளம். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். அதனால்  இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார். அதற்கு நாடெங்கிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவரே தனது கருத்துக்கு விளக்கம் என்கிற பெயரில் வாபஸ் வாங்கிவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இந்தி மொழியை ஆதரித்து ட்விட்கள் இட்டு வருகிறார். அதில்,... இந்திய முழுவதும் இளைஞர்கள் செல்ல ஏதுவாக  கூடுதல் மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கிறது . இதற்காகப் போராடுவதற்குப் பதில் வட இந்திய மக்கள் தமிழை மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொள்ள வலியுறுத்தலாம். இது சிறந்த கலாச்சார பரிமாற்றமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், இந்தி திணிப்புக்கு எதிராக போராடுபவர்களின் குழந்தைகள் தமிழ் மட்டும்தான் பேசுகிறார்களா? புதிய மொழியால்  தாய் மொழியின் மீதான பற்று  விலகிவிடுமா? தமிழ் மொழியை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறாக இயங்குகிறோம் என்றும் நமது பிள்ளைகளுக்குத் தேவை சிறந்த கல்வி, முழுமையான பாடத்திட்டம், நம்பிக்கை போன்றவை தான்.  இவை தெரிந்துவிட்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது  தெரிந்துவிடும். பெற்றோர்களாகிய நாம், அவர்களுக்குக் கலாச்சாரம்  மாற்று பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார். இத்தோடு தமிழில் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு இனி, இந்தியில் படம் இயக்கப்போவாரா லட்சுமி ராமகிருஷ்ணன்.