ரிலீஸுக்கு முன்பு பலத்த சர்ச்சைகளில் சிக்கிய கங்கனா ரனாவத்தின் ‘மணிகர்னிகா’ மூன்றே தினங்களில் 38 கோட் ரூபாய் வசூலை அனைவரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கும் நிலையில், ‘இப்படத்தில் என் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று கொந்தளிக்கிறார் இயக்குநர் கிரிஷ். 

சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர் கிரிஷ். மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இப்படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா தந்தை ராமராவ் வேடம் ஏற்று நடித்தார். ஆந்திராவில் கடந்த 9ம் தேதியன்று ரிலீஸான அப்படம் படுதோல்வியை சந்தித்தது.

முன்னதாக ஜான்சி ராணி வாழ்க்கை சரித்திரத்தை மணிகர்னிகா பெயரில் இந்தியில் இயக்கி வந்தார் கிரிஷ். இந்நிலையில் என்.டி.ராமராவ் படமும் இயக்க ஒப்புக்கொண்டார். மணிகர்னிகா படத்தின்  சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய கேட்டபோது கிரிஷ் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஜான்சி ராணி வேடத்தில் நடித்த கங்கனா ரனாவத் ஏற்க முன்வந்ததுடன் இயக்குனர் பொறுப்பில் தனது பெயரை இடம்பெற செய்தார். 

சுமார் ஆறு மாதங்களாக ‘மணிகர்னிகா’ குறித்து மவுனம் சாதித்து வந்த கிர்ஷ் தற்போது அப்படம் அடைந்துள்ள மாபெரும் வெற்றியால் கொதித்துப்போய் உள்ளார். அப்படம் முழுமையும் தனது சொந்த உழைப்பு என்றும் கங்கனா தன்னை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துவிட்டார் என்றும் கூறும் கிரிஷ் தொடர்ந்து பேசுகையில், ’ஜான்சிராணி படத்தை கடந்த ஜூன் மாதமே முழுமையாக முடித்துக்கொடுத்து விட்டேன். எல்லோரும் டப்பிங் பேசினார்கள். கங்கனா ரனாவத் மட்டும் டப்பிங் பேசாமலிருந்தார். பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட அவர் படத்தில் சில காட்சிகளை மாற்றி அமைத்து ரீ ஷூட் செய்ய கேட்டதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சோனுவின் கதாபாத்திரத்தை இடைவேளைக்கு முன்பே கொல்வதுபோல் அமைக்க வேண்டும் என்றார்.

வரலாற்றில் அதுபோல் கிடையாது என்று கூறியும் ஏற்க மறுத்துவிட்டார். சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டும் என்று என்னை கேட்ட போது நான் வேறு படத்தை இயக்குவதாக கூறினேன். உடனே கங்கனாவே டைரக்டர் பொறுப்பை ஏற்பார் என்றார்கள். மணிகர்னிகா படம் இயக்கியவகையில் எனக்கு 30 சதவீதம் சம்பளம்தான் தரப்பட்டது. முழுபடத்தையும் நான் முடித்த நிலையில் சில காட்சிகளை ரீ ஷூட் செய்த கங்கனா இயக்குனர் என்று தனது பெயரை போட்டுக்கொண்டிருக்கிறார். இயக்குனர் பணி எதுவும் செய்யாதநிலையில் அவர் எப்படி அப்படத்தின் இயக்குனருக்கான தகுதியை பெறுவார்?’ என்று கொந்தளிக்கிறார்  கிரிஷ்.