’தனது 88 வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுத்து நடித்தார் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி’என்று வியந்து கூறுகிறார் இயக்குநர் கண்ணன்.காமெடி நடிகர் சந்தானத்தை கதாநாயகனாகக்கொண்டு அவர் இயக்கிவரும் படத்தில் ‘தில்லு முல்லு’படத்தில் நடித்ததற்கு இணையான பாத்திரம் ஒன்றில் அவர் நடிப்பதாகக் கூறுகிறார் கண்ணன். 

தனது 18 வது வயதில் 1949ம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்த செளகார் ஜானகி இன்று வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கண்ணன் இயக்கத்தில் சந்தானத்துடன் நடித்து வரும் படம் அவரது 400 வது படமாகும். அப்படத்தில் அவரது அர்ப்பணிப்பு குறித்துப் பேசிய இயக்குநர் கண்ணன்,...‘சௌகார்’ ஜானகி எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் சவாலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

அதேபோல் என் படத்திலும் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படம் முழு நீள நகைச்சுவைப் படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கிறார். நான் அவரின் கதாபாத்திரத்தைப் பற்றி கூறியதும் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். சந்தானம் உட்பட பலருக்கும் டஃப் கொடுப்பதாகவே அவரது நடிப்பு உள்ளது.

மிகப்பெரிய நடிகை 70 ஆண்டுகளாக பல பெரிய நாயகர்களுடன் நடித்திருந்தாலும், இந்த வயதிலும் நடிப்பின் மீதிருந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் சிறிதும் குறையவில்லை. மேலும், அவரிடம் எனக்கு வியப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திய விஷயம் அவருடைய நினைவுத் திறன் தான்.இதுவரை 15 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அவருடைய பகுதி முடிவடைந்து விடும். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது’என்று கூறுகிறார் கண்ணன்.