‘பிங்க்’ பட ரீமேக்காக ‘தல 59’ படத்தை இயக்கிவரும் ஹெச். விநோத் ‘தல 60’ படத்தை தான் இயக்கவிரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும், இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் வட்டாரம் செம டென்சனுக்கு ஆளாகியிருப்பதாகவும் ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகர வட்டாரங்கள் வம்பளக்கின்றன.

‘சதுரங்க வேட்டை’, தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் ஹெச்.விநோத் அஜீத்தின் 59 வது படமாக ‘பிங்க்’ ரீமேக்கை இயக்கிவருகிறார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து ஜால்ரா இயக்குநர் சிவாவின் இயக்கத்திலேயே நடித்து வந்த அஜீத்துக்கு விநோத் அவ்வளவாக செட் ஆகவில்லையாம்.

இதையொட்டி இயக்குநருக்கும் அஜீத்துக்கும் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக தல 60 ஆக இயக்க விநோத் வைத்திருக்கும் கதையில் ஓவர் கரெக்‌ஷன் சொன்ன அஜீத், தேவைப்பட்டால் அடுத்த படமும்  போனி கபூர் சிபாரிசு செய்யும் ஒரு இந்தி  ரீமேக்காக இருக்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதைக்கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்த விநோத், ‘என்னது மறுபடியும் ஒரு ரீமேக். அப்படித்தான்னா அந்தப் படத்தை கண்டிப்பா நான் இயக்கமாட்டேன்’ என்று அஜீத்துக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துவிட்டாராம். இதை உள்ளூர ரசித்த அஜீத் விஸ்வாசம் இயக்குநருக்கு லைட்டாக சிக்னல் காட்டியிருக்கிறாராம்.