பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மூடப்பட்ட அறைக்குள் கொரோனா தொற்று வேகமாக பரவும் என எச்சரித்தனர். 

இதனிடையே  டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் விஜய் மற்றும் சிம்புவுக்கு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கடிதம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. அதில்,  “டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர். 

இந்த நோய் பரவல் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை. பான்டமிக் இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். 

தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி. இல்லை கொலை, சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பான்டமிக்கில் இருந்து வெற்றிகரமான மீண்டு வர முயற்சிக்கலாமா?. மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்” என குறிப்பிட்டிருந்தார். 

மருத்துவர் அரவிந்தின் இந்த போஸ்ட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவி வரும் நிலையில் காட்டேரி பட இயக்குநர் டிகே-வின் ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், ஏ.சி. உள்ள பார்கள் மற்றும் கிளப்புகள் எல்லாம் திறக்கப்பட்டபோது இந்த டாக்டர் ஏன் கடிதம் எழுதவில்லை என்று வியக்கிறேன். சினிமாவை தாக்கிப் பேசினால் 15 நிமிடத்தில் எளிதில் பிரபலமாகவிடலாம் என்பதால் தான்” என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பலவகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.