திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கொரோனா முதல் அலையின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் இரண்டாவது அலை உண்டு, இல்லை என மக்களை உலுக்கி எடுத்துவிட்டது. திமுக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா 2வது அலையின் கோரதாண்டவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் சில தளர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பெரும்பாலும் தளர்வுகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அதில் தியேட்டர்கள் திறப்பும் ஒன்று. அந்த வகையில் கட்டுப்பாடுகளுடன் திரையரங்கை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பளர்களும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இன்றிலிருந்து 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த இரண்டு ஆண்டுகளைத் திரையுலகின் கருப்பு நாட்களாக்கிவிட்டது இந்த கரோனா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டன. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக்குறியோடு நகர்ந்த நாட்களில் இன்று முதல் திரையரங்குகளை 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.

ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காணக் காத்திருக்கிறோம். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.