Director Bharathiraja Hospitalized Chennai Health Update : இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாசத்திற்குரிய பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மகன் மனோஜ் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்தார். அவரது இறப்பு பாராதிராஜாவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது மட்டுமின்றி அவரை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியது.
அன்று முதல் சோர்வாக காணப்பட்ட பாரதிராஜா கடந்த ஒரு சில மாதங்களாக தனது மகளின் வீட்டில் இருந்து வந்துள்ளார். மலேசியாவில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிலிருந்து கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது வழக்கமான பரிசோதனை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரத்திலிருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
