கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள வீட்டில் தங்கி வந்தார். சென்னையில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் இருமடங்காக அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை கொரோனா ஹாட் ஸ்பார்ட்டாக உள்ளது. சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூருக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இயக்குநர் பாரதிராஜா தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுள்ளார். தேனிக்குள் நுழையும் முன்பே நுழைவாயிலில் வைத்து பாரதிராஜாவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது சளி மாதிரியை சேகரித்த அதிகாரிகள் அவருடைய உதவியாளர்கள் உடன் சேர்ந்து அனைத்து மாதிரிகளையும் சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். பாரதிராஜாவிற்கு எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான ஸ்டிக்கரும் இயக்குநர் பாரதிராஜாவின் தேனி வீட்டின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது. 

இந்த செய்தி காலை முதலே ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்த நிலையில் அதற்காக விளக்கம் கொடுத்துள்ளார். தேனியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட என் சகோதரியை பார்க்க வேண்டும் என்பதற்காக முறையாக அனுமதி பெற்று சென்னையிலிருந்து தேனி வந்தேன். அவர் அறுவை சிகிச்சையில் இருக்கிறார். நான் நேர்மையாக பல மாவட்டங்களை கடந்து வந்தேன். நானே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து வாருங்கள்... நான் பல மாவட்டங்களை கடந்து வந்துள்ளேன். என்னை சோதனை செய்யுங்கள் என்று கூறினேன் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். சென்னை, ஆண்டிப்பட்டி, தேனி என மூன்று இடங்களிலும் எடுத்த சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. தற்போது மகிழ்ச்சியாக தேனியில் தங்கியுள்ளேன். யாரும் எங்களை தனிமைப்படுத்தவில்லை. மக்களின் நலன் கருதி நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். வீணாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.