பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். அவர் பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்திருந்தார் பாரதிராஜா. இதையடுத்து ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று கூறியிருந்தனர். 

இந்நிலையில் மாலை 6 மணிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பியின் பாடலை ஒலிக்க விட்டு அவருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் பிரபலங்கள் லைவ் வீடியோக்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டன. இதில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சத்யராஜ், பிரபு, சிவக்குமார், பாடகி சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

எஸ்.பி.பி.க்கான கூட்டு பிரார்த்தனையில் சத்யராஜ் பங்கேற்றிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய இயக்குநர் பாரதிராஜா. நான் கூப்பிட்டதற்காக நீ வந்ததற்காக கையெடுத்து கும்பிடுகிறேன் என தழுதழுத்த குரலில் உருகினார். இதைக் கேட்ட சத்யராஜ், நீங்கள் கூப்பிட்டால் கண்டிப்பா வருவோம். பாலு சாருக்காக கண்டிப்பா வந்தே ஆகனும் சார். 75 படத்தில் வில்லனாக நடித்தவன், டூயட் பாடி ஜனங்கள் பார்த்ததற்கு காரணம் அவருடைய குரல் சார். எப்படி சார் என்னை எல்லாம் ஹீரோவாக பார்ப்பாங்க என இதில் உருக்கமாக பேசிக்கொண்டிருந்த நடிகர் சத்யராஜ் திடீரென கதறி அழ ஆரம்பித்தார். அந்த குரலுக்காக நான் வந்தேன் என உருக்கமாக கூறினார். 

தொடர்ந்து பேசிய பாரதிராஜா, எஸ்.பி.பி. திரும்ப வந்துவிடுவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் வருவார். எனக்கு பஞ்ச பூதங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அப்படி நடக்காவிட்டால் பஞ்ச பூதங்களே பொய் என நா தழு தழுக்க உருக்கமாக பேசியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.