"கருத்துக்களை பதிவு செய்" என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய பாக்யராஜ், செல்போன்கள் வந்த பின்னர் தான் நாட்டில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. அப்படி என்னதான் செல்போனை வச்சி பேசிக்கிட்டிருக்கீங்கன்னு தெரியலை. ஆண்கள் சின்ன வீடு வைத்துக் கொண்டாலும், அவர்களுக்கு எவ்வளவு தான் தாராளமாக செலவு செய்தாலும், பெரிய வீட்டை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பெண்கள் முறைதவறி கள்ளக்காதல் வைத்துக் கொண்டால், கணவன், குழந்தைகளை கொலை செய்யும் அளவிற்கு துணிகிறார்கள் என பெண்கள் குறித்து சகட்டு மேனிக்கு விமர்சித்தார். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல எனக்கூறிய பாக்யராஜ், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பது பழமொழி, பெண்கள் சுயகட்டுப்பாடுடன் இருந்தால் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றார். மேலும் பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் வீக்னஸை ஆண்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும், அதற்காக ஆண்களை மட்டுமே குறை சொல்லி பயனில்லை என்றும் பேசினார். பெண்களின் பலவீனத்தை ஆண் பயன்படுத்திக் கொண்டது தவறு என்றால், அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்த பெண்கள் செய்தது மிகப்பெரிய தவறு என கடுமையாக சாடினார். 

இதனால் தான் பெண்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியம் என்றும், அதற்காகத் தான் பெண்களை அடக்கத்துடன் இருக்க முன்னோர்கள் கூறியதாகவும் தெரிவித்தார். பெண்களை சகட்டு மேனிக்கு தரக்குறைவாக விமர்சித்த இயக்குநர் கே.பாக்யராஜ்க்கு பலதரப்பட்ட பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.