முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்று  கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி ஒரு சமூக ஊடக பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது. இதற்க்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில், இயக்குனர் இமையம் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இன்று காலை முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தற்போது இவருடைய விடுதலை குறித்து, இயக்குனர் பாரதி ராஜா தெரிவித்துள்ளதாவது, எழுவர் விடுதலையில் உச்சநீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை. ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக் கட்சி தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்திற்கு உரியது.

தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி

ஒரு விடியற்காலை
பொழுதுக்காக
கண்ணீர் மல்க
காத்திருப்பது
வேதனைக்குரியது....
மதிப்புமிக்க ஆளுநர்
மற்றும் ஆட்சியாளர்களே
மன்றாடிக் கேட்கின்றோம்
மனது வையுங்கள்....
உடனே விடுதலை தாருங்கள்’

இவ்வாறு பாரதிராஜா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.