இயக்குநர் பாலா அனுப்பிய மிரட்டல் மெயிலால் நடிகர் விக்ரம், படத்தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா, நடிகர் துருவ் விக்ரம் ஆகியோர் படுபயங்கர அப்செட்டில் இருப்பதாக ‘ஆதித்ய வர்மா’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு ரீமேக்கான பாலாவின் ‘வர்மா’வை படமாக இல்லை என்று தயாரிப்பாளர் தூக்கி எறிந்த நிலையில் பாலா எரிமலையாய்க் கொதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘துருவின் எதிர்காலத்துக்காக அமைதி காக்கிறேன்’ என்று அந்தப் பிரச்சினையை அப்போதைக்கு புஷ்வாணமாக்கினார் பாலா.

அடுத்து அதே படம் ஆதித்ய வர்மாவாக்கப்பட்டு படப்பிடிப்பு முடியும் வரை அமைதிகாத்த பாலா தற்போது சிறப்பாக ஒரு மோப்பம் பிடித்து தனது’வர்மா’ காட்சிகள் சிலவற்றை ‘ஆதித்ய வர்மா’வில் பயன்படுத்தவிருப்பதைப் புரிந்துகொண்டார். இதை ஒட்டி அவர் முதலில் நடிகர் விக்ரமுக்குக் கடிதம் அனுப்ப பதறிப்போன அவர் ‘படத்தில் எனக்கு எந்தத் தலையீடும் இல்லை. எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளரைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று போட்டுக்கொடுத்தபிறகே பாலா தயாரிப்பாளருக்கு ‘எனது காட்சிகளைப் பயன்படுத்தினால் சும்மா இருக்கமாட்டேன்’ என்று மிரட்டல் மெயில் அனுப்பினாராம்.

இதை சற்றும் எதிர்பாராத தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா, ‘பாலா எடுத்த அந்தக் காட்சிகளும் என் பணத்தில் எடுக்கப்பட்டதுதானே’ என்று புலம்பியபடி சட்டவல்லுநர்களை ஆலோசித்து வருகிறாராம். ஆக பாலா படத்து ‘வர்மா’ காட்சிகளை இந்தப் படத்தில் சொருகும் திட்டம் இன்னமும் இருக்குன்னு சொல்லுங்க.