விஜய்யை வைத்து ‘பிகில்’படத்தை இயக்கிவரும் இயக்குநர் அட்லி அடுத்து ஷாருக் கானை ஹீரோவாக தமிழ், இந்தி ஆகிய இருமொழிப் படங்களை இயக்கவுள்ளதாக அவரது உதவி இயக்குநர் வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்காக விஜய்யின் ’பிகில்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. 2019 தீபாவளி நாளில் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதற்காகத் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் அட்லி,  தனது அடுத்த படம் தொடர்பாக இந்தி நடிகர் ஷாருக்கானை சந்தித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘பிகில்’ படத்தில் ஷாருக்கான் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவஎன்று சொல்லப்பட்டது. அதற்கு ஆதாரமாக மும்பையில் நடந்த ஐபிஎல் மேட்ச் ஒன்றின்போது ஷாருக் கானும் அட்லியும் சந்தித்த படங்கள் வெளியிடப்பட்டன. தற்போது மும்பைக்கு சென்று அட்லி மறுபடியும் ஷாருக் கானை சந்திக்க அதற்காகத்தான் இந்தச் சந்திப்பு நடந்திருக்கும் என்று நினைத்தால் இல்லையாம்.விஜய் படம் முடிந்ததும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறாராம் அட்லி. ஆம், அதற்கான சந்திப்புதான் நடந்தது என்கிறார்கள்.ரஜினிக்கு சொல்வதற்காக ஒரு கதை வைத்திருந்தாராம் அட்லி. இந்நிலையில் ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உடனே ரஜினிக்கு என்று வைத்திருந்த கதையை ஷாருக்கிடம் சொன்னாராம் அட்லி. அவருக்கு அது பிடித்துவிட்டதாம். நிச்சயம் நாம் சேர்ந்து படம் செய்வோம் என்று சொல்லிவிட்டாராம் ஷாருக்.இதனால், இன்ப அதிர்ச்சியில் பித்துப்பிடித்தது போல் அலைந்து கொண்டிருக்கிறாராம் அட்லி.இந்தி, தமிழ் மொழிகளில் எடுக்கப்படவிருக்கும் இந்தச் செய்திதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.