’அக்னிதேவி’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து நடந்து முடிந்த பிறகு  பாபிசிம்ஹா நடந்து கொண்டதைக் குறித்து ஒரு பதிவை தயாரிப்பாளரும் இயக்குநருமான அசோக் ரங்கநாதன் வெளியிட்டிருக்கிறார்.

“அக்னி தேவி படத்தின் பிரச்சனை குறித்து நடந்த பேச்சு வார்த்தையில், பாபி சிம்ஹா நடந்து கொண்ட விதம் அநியாயத்தின் அராஜகத்தின் உச்சம். சுருக்கமாகச் சொன்னால் மூன்று கட்டளைகளை சொல்லி செய்தால்தான் மேற்கொண்டு நடிப்பேன் என்று அடாவடி செய்த நடிகர் பாபி சிம்ஹா.

கட்டளைகள் வருமாறு:-

1. முறைப்படி போட்ட ஒப்பந்தத்தை கிழித்துவிட்டு, அவர் சொல்படி ஒப்பந்தம் போட வேண்டும். 2. படத்தின் எடிட்டிங்கை நான்தான் இறுதி செய்வேன்
3. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஜான் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் கொடுக்க வேண்டும். படப்பிடிப்பு நடத்தியதை தூக்கி எரிந்து விட்டு, மீண்டும் புதிதாக படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

இதையெல்லாம் செய்தால் நடிப்பேன், இல்லை என்றால் படத்தை ஓட விடாமல் செய்து விடுவேன் என்று சொல்லி, படத்தை இன்று ஓட விடாமல் செய்தும் விட்டார். பாபி சிம்ஹா போன்ற நடிகருக்கு சில விசங்களை நினைவூட்ட விரும்புகிறேன்.

ஒருவன் இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக பல கனவுகளை சுமந்து கொண்டு, அப்பா அம்மாவிடம் திட்டு வாங்கி, சொந்தம் பந்தம் உற்றார் உறவினர் ஏளனப் பேச்சுக்கு ஆளாகி, புலம் பெயர்ந்த அகதியாய் சொந்த ஊருக்கு போக முடியாமல், தகுதி வரத்து தள்ளி போய் உயிராய் நினைத்த தங்கச்சி திருமணத்தில் ஓரத்தில் நின்று, நம்பி வந்த மனைவி நட்டாத்தில் விட்டதாய் நினைக்க வைத்து, நண்பர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து, எத்தனை எத்தனை துன்பங்கள் தெரியுமா?

இன்னும் மோசமான நிலை தயாரிப்பாளருடையது. கடன உடன வாங்கி ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துடலானு, இன்று சினிமா இருக்கும் மோசமான சூழ்நிலையில் அதிக வட்டிக்கு வாங்கி, வாங்கிய கடனை கட்ட முடியாமல், பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், பெயரில்லா போன் கால்களை பயந்து பயந்து எடுத்து, பெத்தப்புள்ளைங்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் இன்னும் ஏராளமான துன்பங்களோடு இருக்கிறார்கள்.

நீங்கள் ஈகோவில் இடறியது ஒரு நாள் கூத்தல்ல. ஒரு இயக்குனர் & தயாரிப்பாளரின் ஒரு யுக வாழ்க்கைக்கனவு. அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியவர்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர்களை அழித்தே தீருவேன் என்று நீங்கள் பேசியதை நேரில் கண்டு, பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். இந்த தமிழ் சினிமா உங்களை தாங்கி பிடிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

நல்லாயிருங்க திரு.பாபி சிம்ஹா. எதிர்கால இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.”

:- அஷோக் ரங்கநாதன்
தயாரிப்பாளர் & இயக்குனர்