பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர், அவருடைய காதலி திவ்யங்காவை, இன்று கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் ஏ.ஆர்.முருகதாஸிடம்,  உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.  இவர் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் நடித்த ஆக்சன் திரில்லர் படமான,  'அரிமா நம்பி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.  இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததை தொடர்ந்து பல படங்களை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அந்த வகையில் சியான் விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில், மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட, 'இருமுகன்' படத்தை இயக்கியிருந்தார்.  இந்த படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கடைசியாக விஜய் தேவாரகொண்டா நடிப்பில், தமிழ்  தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான 'நோட்டா' படத்தை இயக்கியிருந்தார்.  இந்நிலையில் இவர் தன்னுடைய காதலி திவ்யங்கா  இன்று திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சில பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.