Director Aamir Exclusive press meet Regards Ashok Suicide

இயக்குநர் சசிக்குமாரின் அத்தை மகன் அசோக்குமார் வட்டி பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தை கோலிவுட்டை நோக்கி பரிதாபமாக திரும்ப வைத்திருக்கிறது. 

இந்த மண்ணின் சாதாரண பிள்ளைகள் 4 பேர் நெல்லையில் தீக்கு தங்களை தின்னக்கொடுத்த போது விஷால் உள்ளிட்ட வெகு சிலரை தவிர வேறு எந்த நடிகர்களும் பெரிதாய் அலடிக் கொள்ளவில்லை. தங்கள் படங்களில் உறவையும், நட்பையும் கொண்டாடிக் கொண்டாடியே கோலிவுட்டில் உயர்ந்த சசிக்குமார் உள்ளிட்வர்கள் போகிற போக்கில் அனுதாபத்தை உதிர்த்துவிட்டு நகர்ந்தாலே தவிர நின்று எதையும் செய்துவிடவில்லை. 

சமூகத்தில் தனி மனிதனுக்கு ஆயிரம் பிரச்னைகள் இருக்கும் அதற்கெல்லாம் சசியும், சேரனும் ஓடிவந்து உதவ வேண்டுமா? அது பிராக்டிக்கலாக முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் கதையை எடுத்துத்தான் இவர்கள் வித்தியாசமான சினிமாவை உருவாக்குகிறார்கள்! எவனிடமிருந்து படமெடுத்தோமோ அவனிடமே அதை திருப்பிப் போட்டுக் காட்டி கோடி கோடியாய் வசூலும் செய்கிறார்கள். ஆக இவர்கள் கதை பிடிக்கவும், காட்சியமைக்கவும், இவர்களின் படம் ஓடுவதற்கும், இவர்களை நாயகனாய் கொண்டாடுவதற்கும் ஒவ்வொரு தனி மனிதனும் வேண்டும் எனும் நிலையில், அந்த தனி மனிதனுக்கான மிகப்பெரிய பிரச்னையில் இவர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் தோள் கொடுக்கத்தான் வேண்டும். 

சரி, இவர்கள் அதற்கான ஆளில்லை. மனித நேயம், சக மனிதனிடத்தில் அன்பு! என்று தியேட்டரின் திரை கிழிய படமெடுப்பார்களே தவிர யதார்த்த வாழ்வில் சமூகத்திடம் அதை காட்டமாட்டார்கள். ஆனால் அநீதிகளை கண்டு பொங்கும் கதாபாத்திரமாகவும், லஞ்சம், அநியாய வட்டி உள்ளிட்டவைகளுக்கு எதிரானவர்களாகவும் சூடேற! சூடேற! படமெடுத்து சம்பாதிக்கும் சமுத்திரக்கனியும், சசியும் தங்களுக்குள்ளே கூட நடிகர்களாகவும், போலிகளாகவும்தான் இருந்திருக்கிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது.

சினிமா மூலம் தங்களுக்கு கிடைத்த புகழை வைத்துக் கொண்டு கல்லூரிகள், விழாக்கள் என்று சென்று தன்னம்பிக்கை! வகுப்பு வேறு எடுத்தார்கள் இவர்கள் என்பதை சொல்லி எதில் முட்டி அழ?

இந்த சந்தேகத்தை எழுப்புவது அசோக் குமாரின் மரணமும், அதை தொட்டு அமீர் தந்திருக்கும் வெளிப்படை மரணமும்தான் என்கிறார்கள் விமர்சகர்கள். அதாவது தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் தன் கடைசி கடிதத்தில் “கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு படங்களை சரியான தேதியில் வெளியிட்டோம்.

நாங்கள் செய்த பெரிய பாவம், மதுரையை சேந்த அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதுதான். எங்களிடம் வட்டிக்கு மேல் வட்டி என, ஏழு ஆண்டுகள் வாங்கியவர், கடந்த ஆறு மாதங்களாக எங்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார். எங்கள் வீட்டு பெண்கள் மற்றும் பெரியவர்களை தூக்கிவிடுவேன் என்று மிரட்டினார். அதிகார வர்க்கங்களான காவல்துறை, அரசாங்கத்தை ஆளும் பெரும்புள்ளிகள், சினிமா சங்க நிர்வாகிகள் எல்லார்ம் அவருக்கு ஆதரவு. சசிகுமாரை அன்புச்செழியன் சித்ரவதை செய்வதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் சசியை மீட்க என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஆக பணத்தை அடிப்படையாக வைத்து ஒரு மிகப்பெரிய வன்மத்துக்கு தன்னையும், தன்னை சுற்றி இருக்கும் நபர்களையும், தன் குடும்பத்தையும் ஏழெட்டு ஆண்டுகளாக பலியாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார் சசிக்குமார். லஞ்சம், அதிக வட்டி வாங்குவது மட்டுமல்ல லஞ்சம், அதிக வட்டி கொடுத்து கிரிமினல்களை வளர்த்து விடுவதும் குற்றம் என்று படமெடுக்கும் சசிக்குமார் போன்றவர்கள் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்தது அசிங்கம். தனக்கும் தனக்கு நெருக்கமாய் உள்ள நபர்களுக்கும் வட்டி ரீதியில் அன்பு அத்தனை அக்கிரமத்தை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதை தைரியமாக வெளியே சொல்லதது சசிக்குமாரின் ஆகப்பெரிய குற்றம். இதை அவர் வெளிப்படுத்தி தன் சுற்றத்தை காத்திருக்க வேண்டும். வெற்று ஈகோவுக்காக, சுயமரியாதைக்காக, பவுடர் முகம் அழுக்குப்பட்டுவிடும் என்பதற்காக பொத்திக் கொண்டு...வாயை! இருந்தது என்ன நியாயம்? என்று கேட்கின்றனர் விமர்சகர்கள். 

‘உன் மகளை தூக்கிடுவேன்! உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன்! உங்க வீட்டு பெருசை தூக்கிடுவேன்’ என்று மதுரை மண்ணின் கிரிமினல்தனம் பொங்கப்பொங்க பகீர் காட்சிகளை படமாக்கிய சசிக்குமார் இத்தனை நாட்களாக தன் சொந்த அனுபவத்தைத்தான் படமாக்கியிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது என்கிறார்கள். 

சசிக்குமாரால் நேற்று மீடியாவை எதிர்கொண்டு பேசமுடியவில்லை. நான்கு வார்த்தைகளை சொல்லிவிட்டு அப்படியே தவிர்த்து நகர்கிறார். அவருக்கு பின்னாலிருந்தபடி சமுத்திர கனியும் அவரை தள்ளிச் செல்கிறார். எந்த உண்மையையும் ஊருக்கு முன் சொல்ல இவர்கள் தயாரில்லை. தங்கள் படங்களை பற்றி பிரமோட் செய்ய மட்டும் மீடியா வேண்டும் இவர்களுக்கு, அப்படித்தானே? என்கிறார்கள் விமர்சகர்கள். 

இவர்களின் இந்த போலி சினிமாத்தனத்தை அந்த ஸ்பாட்டிலேயே பொளேர் வார்த்தைகளில் போட்டுடைத்தார் இயக்குநர் அமீர் இப்படி...”மதுரை அன்புச்செழியன் டார்ச்சர் பண்ணினதா அசோக்குமார் லெட்டர் எழுதி வெச்சுட்டு செத்திருக்கான். வாங்குன கடனுக்கு வட்டி கொடுத்திருக்கான். ஆனா அந்தாளு வட்டி, கந்து வட்டி, வட்டிக்கு மேலே வட்டின்னு போட்டிருக்காரு. நியாயப்படி இந்த கேஸுக்கு கொலை வழக்குதான் போடணும். 
இந்த மாதிரி நிறைய நடக்குது. திரைத்துறையினர் இதை சரி செய்யலேன்னா இண்டஸ்ட்ரியை இழுத்து மூடிட்டு எங்கேயாச்சும் போயிடலாம்.” என்றவரிடம் ‘இவர் போல் பாதிக்கப்பட்டவர் யாராச்சும் இருக்கிறாங்களா?’ என்று கேட்டதும், பக்கத்திலேயே சசியை வைத்துக் கொண்டு

“எவன் சார் பாதிக்கப்பட்டவன் சொல்றாங்க? சினிமாவுலதான் ஹீரோ வசனம் பேசுவாய்ங்க. தைரியமா வெளியில சொல்ல யாருக்கு தைரியம் இருக்குது?வட்டிக்கு மேலே வட்டின்னு போட்டு ரிலீஸை நிறுத்தி வைக்கிறதுன்னு போகுது கதை.” என்று சொல்லி அமீர் விளக்கமாக சசிக்குமாருக்கு நடந்த டார்ச்சர்களை பேசுவதற்குள் சமுத்திரகனி கோபமாக எல்லோரு நகர்வதற்கான சீனை உருவாக்குகிறார். கூட்டம் கலைகிறது. 

ஆக அசோக்குமார் சாவுக்கு அநியாய கடன் கேட்ட அன்புச்செழியன் மட்டுமா காரணம்? அநியாய கடனை கொடுத்துக் கொண்டிருந்த சசியும்தானே?! என்கிறார்கள் விமர்சகர்கள். 
சசிக்குமாரின் பாணியில் சொல்வதென்றால்...’உங்களுக்கு ஒரு நாயம், ஊருக்கு ஒரு நியாயமா நொள்ளைகளா?’