’என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியை பத்திரிகையாளர்களாகிய உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று தனது திருமணச் செய்தியை உறுதி செய்யும் கடிதம் ஒன்றை அத்தனை ஊடகங்களுக்கும் சற்றுமுன்னர் அனுப்பியுள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

இன்று காலை இயக்குநர் விஜய் எம்.பிபி.எஸ். டாக்டர் ஒருவரை மணக்க்விருக்கும் செய்திகள் வெளியாகின. அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தி இயக்குநர் விஜய் பத்திரிகையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,...அன்புக்குரிய பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் நல்லுள்ளம் கொண்ட என் நலன் விரும்பிகளுக்கும்...

வாழ்க்கைப் பயணம் எப்போதுமே அனைவருக்கும் அதன் சொந்த வழியில் சிறப்பானது மற்றும் தனித்துவமானது. எல்லோருடைய வாழ்க்கையைப்போலவே என்னுடைய வாழ்க்கையும் வெற்றி,தோல்வி,மகிழ்ச்சி, வலி ஆகியவற்றை உள்ளடக்கிய வெவ்வேறு கட்டங்களில் பயணித்து வந்துள்ளது.ஆனால் இதுபோன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஆகும். நான் அவர்களை நண்பர்கள் என்று அழைக்கமாட்டேன் அவர்கள் என் குடும்பம்.

அவர்கள் எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு எனது தனி உரிமைக்கு மதிப்பளித்து என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு இனிமையான அணுகுமுறையுடன் நடந்துகொண்டனர்.தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியை பத்திரிகையாளர்களாகிய உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.என் குடும்பத்தினர் என் வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அற்விப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஜூலை 2019ல் முற்றிலும் ஒரு குடும்ப விழாவாக  இத்திருமண நிகழ்வு நடக்க உள்ளது.உங்கள் முழு அன்பு மற்றும் ஆசிர்வாதத்துடன் என் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும் மேலான ஆதரவுக்கும் நன்றி... என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.