பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 

அனுபவம் புதுமை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமனவர் சி.வி.ராஜேந்திரன். அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தது. சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை வைத்து கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அவரது சொந்த ஊர் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் ஆகும்.

சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, சிவகாமியின் செல்வன், கமல் நடித்த உல்லாச பறவைகள், ரஜினி நடித்த கர்ஜனை உள்ளிட்ட பல படங்களை சி.வி.ராஜேந்திரன் இயக்கியுள்ளார். சிவாஜி, விஜய், சிம்ரன் நடித்த ஒன்ஸ் மோர் மற்றும் பிரபு நடித்த வியட்நாம் காலணி ஆகிய படங்களை சி.வி.ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.

ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் ஹிந்தியில் பூர்ணசந்திரா என்ற பெயரில் இவர் இயக்கத்தில் வெளிவந்தது. சி.வி.ராஜேந்திரன்  சிவாஜியை வைத்து 14 படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநா் ராஜேந்திரனின் மறைவுக்கு திரைதுறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.