தடையற தாக்க', 'தடம்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் மகிழ்திருமேணி. தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரான அவர், 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு பின்னனி குரல் கொடுத்ததன் மூலம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

தனது மிரட்டலான காந்தக குரலால் அனைவரையும் வசீகரித்த மகிழ்திருமேணி, தற்போது நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். 
'டிக் டிக் டிக்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'டெடி'. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில்தான், மகிழ்திருமேணி நடிகராக அறிமுகம் ஆகிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போதுதான் 'டெடி' படத்தில் மகிழ்திருமேணி நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், நடிகரான இயக்குநர்களின் வரிசையில் மகிழ்திருமேணியும் இணைந்துள்ளார்.


இந்த சர்ப்ரைசான தகவலை இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் மற்றும் ஆர்யா ஆகியோர், தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், "மகிழ்திருமேணி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

அவரை நடிகராக அறிமுகம் செய்து வைத்ததில் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.
இதேபோல், நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், "டெடி படத்தின் மூலம் நடிகராக சகோதரர் மகிழ்திருமேணி அறிமுகம் ஆவது மிக்க மகிழ்ச்சி. டெடி படத்தில் நீங்கள் ஒரு மிகப்பெரிய பகுதியாக இருப்பதற்கு நன்றி.

 உங்கள் குரல் - உங்கள் கண்கள் மற்றும் உங்களின் ஸ்கிரீன் ப்ரெஷன்ஸ் அனைவருக்கும் விருந்தாக இருக்கும்" எனக்கூறி மகிழ்திருமேணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.'டெடி' படத்திற்கு முன்பே, விஜய்சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் வில்லனாக நடிக்க மகிழ்திருமேணி கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சக்தி சவுந்தரராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவாகிவரும் 'டெடி' படத்தில், ஹீரோயினாக ஆர்யாவின் காதல் மனைவி சாயிஷா நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.