ரஜினியின் ‘தர்பார்’படக்குழு தங்களது இரண்டாவது ஷெட்யூலை திட்டமிட்டபடி முடிக்காமல் பாதியில் சென்னைக்குத் திரும்பியிருக்கிறது. மும்பை சீதோஷண நிலவரப்படி அங்கு இன்னும் 4 மாதங்களுக்கு நல்ல மழை இருக்கும் என்பதால் இனி தர்பார் குழு மும்பைக்கு செல்லாது.

‘தர்பார்’ படத்தின் முதல் ஷெட்யூல் இயக்குநரும் தயாரிப்பாளரும் திட்டமிட்டபடி சிறப்பாக முடிந்திருந்த நிலையில் அதே லொகேஷனில் துவங்கப்பட்ட இரண்டாவது ஷெட்யூல் பெருத்த ஏமாற்றத்தில் முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஷெட்யூலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்ட காட்சிகளில் பாதி கூட எடுத்து முடிக்கப்படவில்லை என்கின்றனர் படக்குழுவினர்.

ரஜினி தேர்தல் ரிசல்டுக்காக சிறிய ஓய்வு எடுக்க நினைத்த போது தர்பாரின் முதல் ஷெட்யூல் பிரேக் விடப்பட்டது. அந்த சின்ன பிரேக் மெல்ல பெரிதாகி ரஜினி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் வரை துவங்கப்படவில்லை. அடுத்து ரஜினி டெல்லியிலிருந்து திரும்பிய பின்னர் இம்மாதம் 4ம் தேதி துவங்கப்பட்ட படப்பில் ரஜினி, யோகிபாபு கலந்துகொண்ட ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. இதில் நடுநடுவே மழை வேறு வரவே இரு தினங்களுக்கு முன்பு மும்பை ஷெட்யூல் ஒரேயடியாக பேக் அப் ஆகிவிட்டது.

இனி மும்பையில் வழக்கமான ஜூல,ஆகஸ்ட்,செப்டெம்பர் மாதங்களில் மழை கொட்டித்தீர்க்கும் என்பதால் அங்கு படப்பிடிப்பைத் தொடர தர்பார் படக்குழு தயாராக இல்லை. அடுத்த ஷெட்யூல் டெல்லி மற்றும் சண்டிகரில் திட்டமிடப்படுகிறது.