தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் 'தர்பார்' படத்தை பிரம்மாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாசலம் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ளார். அவர்களுடன், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே கைகோர்த்துள்ளன. 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து, 'தர்பார்' படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கான பணிகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், 'தர்பார்' படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்ற அப்டேட் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், 'தர்பார்' படத்திற்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கிவிட்டாராம். இந்த சூப்பர் அப்டேட்டை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை, வரும் டிசம்பர் 7ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேநேரம், லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "தர்பார் இசை ரெடி, சூப்பர் ஸ்டார் மற்றும் ராக் ஸ்டார் இந்த மாதம் வருகிறார்கள்" என சூசகமாக பதிவிட்டுள்ளது. 


முன்னதாக, 'தர்பார்' படத்திற்காக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மற்றும் அனிருத் இணைந்து பாடியிருக்கும் பாடல், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக விரைவில் வெளியிடப்படும் லைகா நிறுவனம் அறிவித்திருந்தது.


கடந்த நவம்பர் 7ம் தேதி, 4 மொழிகளிலும் 'தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களையே அதிர வைத்தது. இதனைத் தொடர்ந்து, 'தர்பார்' படக்குழுவிடமிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த மாதம் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்.